Doctor Vikatan: என்னுடைய தோழி வீட்டைவிட்டு வெளியே கிளம்பினாலே 2-3 தண்ணீர் பாட்டில்களுடன்தான் செல்வாள். வெளியே எங்கேயும் தண்ணீர் குடிக்க மாட்டாள். கேட்டால் தண்ணீர் மாறினால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்கிறாள். தண்ணீர் மாறினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது உண்மையா... எங்கே சென்றாலும் இப்படி கையோடு வாட்டர் பாட்டில் கொண்டுசெல்வது அவசியம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை 'டிராவல் பண்ணினேன்... தண்ணி மாறினதால உடம்புக்கு ஒத்துக்காமப் போயிடுச்சு... ஜலதோஷம் பிடிச்சிருச்சு...' என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்கலாம். இது தவறான நம்பிக்கையே... ஜலதோஷம் பிடிக்க முக்கிய காரணம், இன்ஃபெக்ஷன் எனப்படும் தொற்று. இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தும் சூழலில் இருக்கும்போது உங்களுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தி, சளி, காய்ச்சலைத் தரலாம். இப்படி இல்லாத நிலையில் தண்ணீர் மாறுவதால் சளி பிடிக்க வாய்ப்பில்லை...