நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜூனன். 63 வயதான அவருக்கு கடந்த 24 ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூனன் மூளைச்சாவு அடைந்ததை கண்டறிந்துள்ளனர். உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
அர்ஜூனனின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் அர்ஜூனனின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை அகற்றி பாதுகாப்பான முறையில் கொண்டு சென்றனர். உடல் உறுப்புகளை தாமதமின்றி கொண்டு செல்ல கிரீன் காரிடார் முறையில் அலர்ட் செய்து அசுர வேகத்தில் கொண்டுச் சென்றனர். அர்ஜூனனின் உடல் உறுப்புகளை மூன்று பேருக்கு பொறுத்தியுள்ளனர். இதன்மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அர்ஜூனன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து தெரிவித்த ஊட்டி மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, " ரத்தகொதிப்பு காரணமாக அர்ஜூனன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் விதிகளின் படி அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பயனாளர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரியில் நடந்த இரண்டாவது உடல் உறுப்பு தானம் இது " என்றார்.
Comments
Post a Comment