இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது.
ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின.
இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண்டின் இடையில் ஏர்டெல் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை மேலும் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இப்போதே பல வட்டாரங்களில் குறைந்த விலையைக் கொண்டிருக்கும் தங்களின் அடிப்படைத் திட்டமான ரூ.99 பிளானை ரத்து செய்துவிட்டு, ரூ.155க்கு புதிய அடிப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். லாபம் குறைந்ததன் காரணமாக ஏர்டெல் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மித்தல் தெரிவித்துள்ளார்.
இது பற்றிப் பேசிய சுனில் மித்தல், "சம்பளம், வாடகை என எல்லாம் விலை உயர்ந்துவிட்டன. இந்த ஒன்றைத் தவிர. கட்டணம் செலுத்தாமலே கிட்டத்தட்ட 30 ஜிபி டேட்டாவைச் சந்தாதாரர்கள் பயன்படுத்துகிறார்கள். வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் நாட்டில் காணாமலே போய்விட்டன. இந்தச் சூழலில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு நிறுவனம் தேவை." என்றார்.
மேலும், ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர், "ஏர்டெல் நிறுவனத்தின் இருப்பை வலுவாகத் தக்கவைக்க ஏராளமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிலிருந்து எந்த லாபமும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்தத் தொழிலின் மூலதனத்தின் மீதான வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. அது மாற வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் இருக்கும் சூழலுக்கு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்துவது அவசியமான ஒன்று. அது இந்த ஆண்டின் நடுவில் செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment