செக்கில் ஆட்டிய எண்ணெய்களில்தான் நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிற, ஆரோக்கியம் சார்ந்த தெளிவும் நம்பிக்கையும் பலருக்கும் வந்துவிட்டது. அதே நேரம், சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருக்கிற நல்லெண்ணெய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால், ஏன் அவை அப்படி இருக்கின்றன... அவற்றில் எது ’நல்ல’ எண்ணெய் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அதற்கான விளக்கத்தைத் தருகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.
’’மரச்செக்கில் எள்ளைப்போட்டு ஆட்டி, நல்லெண்ணெய் எடுக்கும்போது அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்ப்பார்கள். கரும்பு வெல்லம் சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் லேசான நிறத்துடனும், கருப்பட்டி சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் அடர்ந்த நிறத்துடனும் இருக்கும். தவிர, கரும்பு வெல்லத்தின் நிறம் எப்போதும் ஒன்றுபோல இருக்காது. இதன் காரணமாகவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நிறத்தில் ஒன்றுபோல இருக்காது. மற்றபடி, அந்த நல்லெண்ணெய்கள் எல்லாமே நல்லவைதான்.
இன்னும் சிலர், 'செக்கு எண்ணெய்யின் அடியில் கருப்பாக ஏதோ தங்கி இருக்கிறதே... அது என்ன டாக்டர்?' என்று கேட்கிறார்கள்.
மரச்செக்கில் எள்ளை ஆட்டும்போது அதனுடன் வெல்லத்தையோ அல்லது கருப்பட்டியையோ சேர்ப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா... அப்படி ஆட்டிய எண்ணெய்யை வடித்து எடுத்த பிறகும், அதனுடைய வீழ் படிவு கொஞ்சம்போல எண்ணெய்யின் அடியில் தேங்கி நிற்கும். அதுதான் பார்ப்பவர்களுடைய கண்ணுக்குக் கருப்பாகத் தெரிவது. இந்த எண்ணெய்யைச் சாப்பிடுவதாலோ, சமையலுக்குப் பயன்படுத்துவதாலோ நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதை எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்றால், நல்லெண்ணெய்யை ஆட்டி எடுத்த பிறகு, அதில் கிடைக்கும் எள்ளு புண்ணாக்கைச் சிறு வயதில் நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். அதனால் நமக்கு எந்தக் கெடுதலும் வரவில்லையே... அது ருசியாக இருந்தது, கூடவே இரும்புச்சத்தையும் நம் உடம்பில் சேர்த்தது. அதனால், செக்கிலாட்டிய நல்லெண்ணெய்யில் அடியில் கருப்பாக இருக்கிறது என்றால் பயப்படாமல் வாங்கலாம். இன்னமும் தயங்குபவர்கள் வெள்ளை வேட்டியில் அந்த நல்லெண்ணெய்யை வடிகட்டிப் பயன்படுத்தலாம்.
கூடுதலாக இன்னொரு தகவல். பலரும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யைக்கூட ரீஃபைண்ட் செய்யப்பட்டதாக வாங்குகிறார்கள். அது சம்பந்தப்பட்டவர்களுடைய விருப்பம் என்றாலும், அது அவசியமில்லை என்பதே என்னுடைய கருத்து. இதனால், சில நுண்ணூட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது." என்கிறார், மருத்துவர் செல்வ சண்முகம்.
Comments
Post a Comment