Doctor Vikatan: என் வயது 46. சில உடல்நல பிரச்னைகளின் காரணமாக எனக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். இந்த ஆபரேஷனுக்கு பிறகு தாம்பத்திய உறவில் வழக்கம்போல ஈடுபட முடியுமா... அந்த ஆர்வம் இயல்பாகவே குறைந்துவிடுமா... கர்ப்பப்பையை நீக்கியவர்கள் தாம்பத்ய உறவுக்குத் தகுதியற்றவர்கள் என்று சொல்லப்படுவது உண்மையா? இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
முதலில் எந்தக் காரணத்துக்காக உங்களுக்கு உங்கள் மருத்துவர் கரப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்தார் என்பது தெரியவில்லை. இந்தச் சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருந்தது என்று பாருங்கள்.
நம்மூரில் பெண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் மிகப் பரவலானது ஹிஸ்ட்ரெக்டமி (hysterectomy) எனப்படும் கரப்பப்பை நீக்கம். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆபரேஷனுக்கு முன்பு உங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லை என்றால், ஆபரேஷனுக்கு பிறகும் பிரச்னைகள் இருக்காது. அறுவை சிகிச்சை முடிந்து நான்கு முதல் ஆறு வாரங்களில் நீங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். இந்த அறுவை சிகிச்சைக்கு முன் உங்களுக்கு உறவின்போது வலியோ, ரத்தப்போக்கோ இருந்து, அதனால் தாம்பத்ய உறவையே நீங்கள் தவிர்த்திருந்தால், ஆபரேஷனுக்கு பிறகு இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியாகும் வாய்ப்புகளும் அதிகம்.
உங்களுக்கு கர்ப்பப்பையை மட்டும் எடுக்கப் போகிறார்களா அல்லது அதனுடன் சேர்த்து ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து எடுக்கப் போகிறார்களா என்பதும் இதில் முக்கியம். அப்படி ஒருவேளை சினைப்பைகளையும் நீக்குவதாக இருந்தால் அதன் விளைவாக அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவின்போது அசௌகர்யம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதற்காக பயப்படத் தேவையில்லை.
கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீக்கத்துக்குப் பிறகு பாலியல் தூண்டலுக்கு அவசியமான ஹார்மோன் சுரப்பு குறையும். இதன் விளைவாக வெஜைனாவில் ஏற்படும் வறட்சியின் காரணமாக தாம்பத்திய உறவு வலி மிகுந்ததாக மாறிவிடும். அதனால் சில பெண்கள் செக்ஸ் உறவையே தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். வெஜைனல் லூப்ரிகன்ட்ஸ் என்ற பெயரில் மருத்துவரின் பரிந்துரை தேவைப்படாமலேயே மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வரலாம்.
எனவே, கர்ப்பப்பையை நீக்கியவர்கள், இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் என்றோ, அப்படியே உறவு வைத்துக்கொண்டாலும் அது முன்பு போல இருக்காது என்றோ நினைக்கத் தேவையில்லை. இந்த விஷயத்தில் கணவரின் சப்போர்ட் மிக முக்கியம். அது இல்லாவிட்டால் இதுவே மிகப்பெரிய ஸ்ட்ரெஸ்ஸாக மாறிவிடும். எனவே மருத்துவரை அணுகி இந்த விஷயத்துக்கு ஆலோசனை பெறுவது சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment