Doctor Vikatan: என் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுக்கு உடல் சூடு அதிகம் என வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வேன். முதல்நாள் இரவே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளிக்கச் சொல்கிறேன். ஆனால், எண்ணெய்க் குளியல் எடுத்த அடுத்த நாளே அவனுக்கு சளி பிடித்துக் கொள்கிறது. இதைத் தவிர்க்க என்ன வழி? எண்ணெய்க் குளியல் எடுக்க எது சரியான முறை?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
‘எண்ணெய்த் தேய்த்து குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்பதாலேயே எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதில்லை…’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம். உண்மையில், முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவ்வளவு சீக்கிரம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராது என்பதே உண்மை.
உங்கள் மகனுக்கு எண்ணெய்க் குளியல் எடுப்பதால் சளி பிடிப்பதாக நீங்கள் நினைத்தால் சில விஷயங்களைப் பின்பற்றச் சொல்லுங்கள். முதல் நாள் இரவே தலை முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு உறங்கிவிடும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறான விஷயம். இதன் காரணமாக உடலில் கபம் அதிகரித்து, சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதல் வேலையாக உங்கள் மகனுக்கு இப்படிச் செய்வதை நிறுத்திப் பாருங்கள். அதிகாலை வேளையில் எண்ணெய்த் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டுக் குளிப்பதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம்.
சளி பிடித்துக் கொள்ளும் என்று பயந்தால், சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தடவிய பின் எண்ணெய்க் குளியல் எடுத்தால் கபம் அதிகரிக்காது. குளித்து முடித்து தலையைக் காய வைத்ததும், சிறிது மிளகைப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தால் சளித் தொந்தரவு நெருங்காது. நல்லெண்ணெய்யில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து மெலிதாகச் சூடேற்றி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை. தும்பைப் பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சிப் பயன்படுத்தினாலும் கபம் தலைதூக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்பு, சாம்பிராணி புகைபோட்டும் தலை உலர்த்திக் கொள்ளலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க, சிகைக்காய் அல்லது அரப்புப் பொடி தேய்த்துக் குளிக்கலாம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேம்பு, கடுக்காய், நெல்லி வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப் பருப்பு சேர்ந்த குளியல் பொடி வகைகளை உடலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய்க் குளியலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment