Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகளும் சிசேரியனில் பிறந்தனர். எனக்கு இயல்பிலேயே மலச்சிக்கல் பிரச்னை உண்டு. பிரசவத்துக்குப் பிறகு அந்தப் பிரச்னை தீவிரமாகிவிட்டது. இப்போது பைல்ஸ் (Piles) பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சர்ஜரிதான் ஒரே தீர்வா... சர்ஜரி செய்தாலும் மீண்டும் அந்தப் பிரச்னை வரும் என்கிறார்களே... அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா
இது நீங்கள் மட்டும் சந்திக்கிற பிரச்னையல்ல... பல பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னையாக இருக்கிறது. மலச்சிக்கல்தான் இதற்கு அடிப்படை காரணம்.
பெரும்பாலும் இது ஃபிஷர் (anal fissure) என்று சொல்லக்கூடிய ஆசனவாய் வெடிப்பாகவே இருக்கும். மலச்சிக்கல் பாதிப்பின் காரணமாக ஆசனவாய் பகுதியில் விரிசல் விட்டதுபோல உணர்வார்கள். அதனால் மலம் கழிப்பதிலும் வேதனையை உணர்வார்கள்.
இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மலம் கழித்த பிறகு 3- 4 மணி நேரம் வரைகூட வலி இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தாமதித்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும்.
ஒருவேளை இது 'ஃபிஷர்' பாதிப்பாக இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், ஆயின்மென்ட், க்ரீம் போன்றவற்றின் உதவியுடன் இதிலிருந்து மீளலாம்.
பலரும் ஆரம்பத்தில் கவனிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்படியே அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றாலும் அதனால் எந்தப் பிரச்னையும் வராது. சரியான மருத்துவரிடம், முறையாகச் செய்துகொண்டால் அறுவை சிகிச்சை மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
முதலில் நீங்கள் மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு இருப்பது ஆசனவாய் வெடிப்பு பிரச்னையா அல்லது பைல்ஸ் (Piles) எனப்படும் மூலநோயா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். ஆபரேஷன் செய்தாலும் பிரச்னை மீண்டும் வருமோ என்ற பயமெல்லாம் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment