Doctor Vikatan: அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள் என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி
அடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது. மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
மீன் முட்டைகளில் உள்ள சத்துகள்
மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் 'Roe' என்று சொல்வார்கள். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளையின் ஆரோக்கியத்துக்கும், இதயத்தின் செயல்பாட்டுக்கும் மிக முக்கியம். தவிர, இந்த அமிலமானது, டிரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் குறையும். உடலின் வீக்கத்தையும் குறைக்கவல்லது. புரதச்சத்து நிறைந்தவை என்பதால், மீன் முட்டைகள் தசைகளைப் பழுதுபார்த்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும்.
மீன் முட்டைகளில் வைட்டமின் டி சத்தும் அதிகமுள்ளது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உதவக்கூடியது. இவற்றில் உள்ள வைட்டமின் பி 12, நரம்பு மண்டலச் செயல்பாட்டை சீராக வைத்திருப்பதுடன், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவக்கூடியது. மீன் முட்டைகளில் உள்ள செலீனியம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், செல்கள் பழுதடைவதைத் தடுக்கக்கூடியவை.
100 கிராம் மீன் முட்டைகளில் 143 கிலோ கலோரிகள், 22 கிராம் புரதச்சத்து, 221 மில்லிகிராம் பொட்டாசியம், 91 கிராம் சோடியம், 6 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் கார்போஹைட்ரேட், 374 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்கும். வைட்டமின் டி, பி 12, சி, பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்றவையும் இதில் உண்டு. இத்தனை சத்துகள் நிறைந்த மீன் முட்டைகளில் லெட், காட்மியம், மெர்குரி, ஆர்செனிக் போன்ற மாசுகளும் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தலாம்...
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மீன் முட்டை உண்ணும் வழக்கம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம். அவற்றை வறுத்து தனியாகவோ, சாதத்துடன் சேர்த்தோ சாப்பிடுவார்கள். மீன் முட்டைகள் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவது போல, மீன் முட்டைகளும் சிலருக்கு அஜீரணக் கோளாறுகளையும், உடலில் வீக்கத்தையும், அனாபிலாக்சிஸ் (Anaphylaxis ) எனப்படும் தீவிர ஒவ்வாமை பாதிப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒவ்வாமை இருப்பவர்கள், மீன் முட்டைகள் சாப்பிடுவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆலோசனை, அளவு அவசியம்..
ஒரு நாளைக்கு 30 முதல் 50 கிராம் அளவு மீன் முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். இது அந்த நபரின் ஆரோக்கியம், செரிமான திறன் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அளவு அதிகரித்து வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனையின்றி மீன் முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். மீன்களோடு சேர்த்து மீன் முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதச்சத்து, வைட்டமின்கள் என எல்லாமே போதுமான அளவு கிடைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment