Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?
Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?
- Jayarani, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.
இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை சுருங்குவதால் விசில் சத்தத்துடன் இருமல் வரும். எனவே உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இந்த மூன்றில் எந்த வகை என மருத்துவர் பரிசோதித்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
இருமும்போது சிறுநீர்க்கசிவு ஏற்படுவது என்பது சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு சகஜம். சிறுநீரகத்தில் உள்ள ஒரு வால்வு தளரும்போது சிறுநீர்க்கசிவு ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தயங்கக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு இன்று நவீன சிகிச்சைகள் இருக்கின்றன.
சிறுநீரகவியல் மற்றும் மகப்பேறு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் (யூரோ கைனகாலஜிஸ்ட்) இதற்கான தீர்வுகளை உங்களுக்குப் பரிந்துரைப்பார்கள். இதற்கான பிரத்யேக அறுவை சிகிச்சை உள்ளது. ஆரம்பநிலை பாதிப்புக்கு வெறும் மாத்திரைகளே போதுமானதாக இருக்கும்.
காதில் சிலருக்கு இயல்பிலேயே சத்தம் கேட்கும். அது ரத்தக்குழாய் அல்லது நரம்பு பாதிப்பின் காரணமாக சத்தம் கேட்கும். இநதப் பிரச்னைக்கு நீங்கள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரைத்தான் அணுக வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment