Doctor Vikatan: என் வயது 27. ஒரு நாளைக்கு 8 -9 காபி அல்லது டீ குடிக்கிறேன். அதைக் குறைக்க முடியவில்லை. வேலை ஸ்ட்ரெஸ், நைட் ஷிஃப்ட் போன்ற காரணங்களால் இதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ எடுத்துக்கொள்ளலாம்...?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்
பரீட்சைக்குப் படிக்க வேண்டும் என்பதற்காகவோ, முக்கியமான வேலை இருக்கிறது, அதை முடிக்க வேண்டும் என்பதற்காகவோ சிலர் நேரம்கெட்ட நேரத்தில் காபியோ, டீயோ குடிக்க விரும்புவார்கள். காபியிலும் டீயிலும் கஃபைன் (caffeine) என்ற கெமிக்கல் இருக்கிறது.
கஃபைன் என்ற கெமிக்கல் நம் மூளையில் வினைபுரியும். தூக்கத்துக்குக் காரணமான கெமிக்கல்களை அது குறைக்கும். அதனால் நாம் அலெர்ட் ஆக இருப்போம். நம்முடைய செயல்பாடுகள் சற்று சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்வோம். ஆனால், ஒருநாளைக்கு இத்தனை காபி, டீக்கு மேல் குடிக்கக்கூடாது என்றொரு கணக்கு இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் ஒருநாளைக்கு 400 மில்லிகிராம் வரை கஃபைன் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 150 மில்லிகிராம் கஃபைன் இருக்கும். அதுவே ஃபில்டர் காபியில் அது 200 மில்லிகிராம் வரை இருக்கலாம். அதே மாதிரிதான் டீயிலும்.... ஒரு கப் டீயில் 100 முதல் 150 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காபி அல்லது டீ குடிக்கலாம். அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
அப்படி அதற்கு அதிகமாக காபியோ, டீயோ குடித்தால் சிலருக்கு அது அடிக்ஷனாக மாறும். காபியோ, டீயோ குடிக்காதபோது ஒருவித படபடப்பு ஏற்படும். வயதானவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். அளவுக்கதிமாக காபி, டீ குடிப்பவர்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் உட்கிரகிக்கப்படுவதில் சிக்கல் வரலாம். கேஸ்ட்ரைட்டிஸ் என்கிற பிரச்னை வரலாம். எனவே, காபியோ, டீயோ... அளவைத் தாண்டாதவரை ஆபத்தானவை அல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment