ஒரு காலத்துல காலேஜ் போற பசங்கதான், முடி ஸ்டைலா காத்துல பறக்கணும்னு தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டாங்க. ஆனா, இன்னிக்கு ஸ்கூல் போற பொடிசுங்ககூட தலைக்கு எண்ணெய் வைக்கப்போனா தடுக்குதுங்க. 'போம்மா, முகத்துல எண்ணெய் வழியும்'னு சண்டைக்கு வருதுங்க. சரி, தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா, அதுவும் தினமும் வைக்கணுமா, அப்படி வைக்கலைன்னா என்ன பிரச்னைகள் வரும்னு இயற்கை மருத்துவர் தீபா அவர்களிடம் கேட்டோம்.
''நம்ம தலையில இயற்கையாவே ஒரு சீபம் சுரக்கும். அது தலை சருமத்தை ஈரப்பதத்தோட பார்த்துக்கும். சில நாள் கழிச்சு அது அப்படியே உலர்ந்து தலையில படியும். இந்த இறந்த செல்களை நீக்குறதுக்குத்தான் வாரத்துக்கு ரெண்டு நாள் தலைக்குக் குளிக்கணும்னு சொல்றோம்.
எண்ணெய் வெச்சே ஆகணுமா?
தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா என்றால், கண்டிப்பா வைக்கணும். தலையில் எண்ணெய் வைக்கும்போது, அதில் இருக்கிற புரோட்டீனும் கொழுப்பும் முடியோட உள்பகுதி வரைக்கும் போகும். தலையில எண்ணெய் எப்படி வைக்கணும் தெரியுமா? இடது கையில கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதை வலது கை விரல்களின் நுனியால தொட்டு, தலை சருமத்துல நல்லா படுற மாதிரி வைக்கணும். அப்போ தான், முடியோட வேர்க்கால்கள் வரைக்கும் எண்ணெய் போய், முடி வலுவாகும்.
யார் தினமும் வைக்கணும்?
முடி நல்லா அடர்த்தியா இருக்கிறவங்க, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கணும். அடர்த்தியே இல்லாம இருந்தா, அவங்க வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும், ராத்திரியில எண்ணெய் வெச்சு, தலை சருமத்துல நல்லா மசாஜ் கொடுக்கணும். இப்படி செஞ்சா, தலையில இருக்கிற இறந்த செல்கள் வெளியேறி ரத்த ஓட்டம் அதிகமாகி, முடியோட வேர்க்கால்கள் வலுவாகும்.
எண்ணெயே வைக்கலைன்னா என்னவாகும்?
சிலருக்கு தலை பூரா கொப்புளம் கொப்புளமா இருக்கு. தலையில இருந்து வெள்ளை வெள்ளையா உதிரும். இதுக்கு காரணம் உடம்பு சூடாகுறதுதான். உடம்பு சூடாகுறதுக்கு முதல் காரணம் தலையில் எண்ணெய் வைக்காததுதான். இரண்டாவது காரணம், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததுதான். இதை அப்படியே கவனிக்காம விட்டீங்கன்னா, உலர் பொடுகு வந்திடும். இது அப்படியே மெதுவா சொரியாசிஸ் ஆக மாறுறதுக்கும் வாய்ப்பிருக்கு. தவிர, முடி கொட்டும். முடியோட பளபளப்பு குறைய ஆரம்பிச்சிடும். நுனிகள்ல பிளவு ஏற்படும். உச்சந்தலையில் முடிகொட்டி சொட்டை விழுறதுக்கும் வாய்ப்பிருக்கு. இவற்றையெல்லாம் தடுக்கணும்னா தலைக்கு எண்ணெய் வெச்சுதான் ஆகணும்'' என்கிறார் டாக்டர் தீபா.
Comments
Post a Comment