Doctor Vikatan: என் வயது 50. எனக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் பருமன் அதிகமிருக்கிறது. இதுவரை நான் எந்த உடற்பயிற்சியையும் செய்ததே இல்லை. இப்போது எடையைக் குறைக்க முடிவெடுத்து ஜிம்மில் சேர யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வயதில் எடையைக் குறைக்க ஜிம்மில் சேர்வது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
50 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள் பலருக்கும் திடீர் ஜிம் ஆசை வருவதை சமீப காலத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. மெனோபாஸ் காலத்தில் உடல்எடையைக் குறைக்க நினைத்து அத்தனை வருடங்களாக பழக்கமே இல்லாத ஜிம் வொர்க் அவுட்டுக்கு தயாராகிறார்கள்.
திடீரென உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. உடற்பயிற்சி என்பது இள வயதிலிருந்தே வாழ்க்கைமுறையில் ஓர் அங்கமாகப் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், பலரும் அந்த வயதில் அதை அலட்சியம் செய்துவிட்டு, வயதான பிறகே அக்கறை கொள்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸ் காலத்தில் அவர்களது உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் எடை அதிகரிப்பது சகஜம்.
நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும். இதை 'மெனோபாட் ( meno-pot) அல்லது மெனோபட்ஜ்' (meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிகளையும் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம்.
50 ப்ளஸ் வயதில் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும் அளவுக்கதிமாக, கடுமையாக வொர்க் அவுட் செய்ய வேண்டாம். குறிப்பாக, கார்டியோ பயிற்சிகளை அளவாகவே செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளை 20 நிமிடங்கள் செய்துவிட்டு, பிறகு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் ஃப்ளோர் எக்சர்சைஸையும் செய்யலாம்.
மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது நின்றுவிடுவதால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழக்கும். அதனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஃபிராக்ச்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்படும் ரிஸ்க் அதிகம். எனவே, ஜிம் சென்று கடுமையான வொர்க்அவுட் செய்வதற்கு பதில் வாக்கிங் செய்வது பாதுகாப்பானது. ஜிம் செல்வதில் உறுதியாக இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment