Doctor Vikatan: என்னுடைய தோழி வீட்டைவிட்டு வெளியே கிளம்பினாலே 2-3 தண்ணீர் பாட்டில்களுடன்தான் செல்வாள். வெளியே எங்கேயும் தண்ணீர் குடிக்க மாட்டாள். கேட்டால் தண்ணீர் மாறினால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்கிறாள். தண்ணீர் மாறினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது உண்மையா... எங்கே சென்றாலும் இப்படி கையோடு வாட்டர் பாட்டில் கொண்டுசெல்வது அவசியம்தானா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்
'டிராவல் பண்ணினேன்... தண்ணி மாறினதால உடம்புக்கு ஒத்துக்காமப் போயிடுச்சு... ஜலதோஷம் பிடிச்சிருச்சு...' என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்கலாம். இது தவறான நம்பிக்கையே...
ஜலதோஷம் பிடிக்க முக்கிய காரணம், இன்ஃபெக்ஷன் எனப்படும் தொற்று. இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தும் சூழலில் இருக்கும்போது உங்களுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தி, சளி, காய்ச்சலைத் தரலாம். இப்படி இல்லாத நிலையில் தண்ணீர் மாறுவதால் சளி பிடிக்க வாய்ப்பில்லை.
எங்கே வெளியே சென்றாலும் தண்ணீர் பாட்டிலுடன் செல்லும் வழக்கம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். நம்மூரில் பெரும்பாலும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக இருப்பதால் பலரும் இப்படி கையோடு வாட்டர் பாட்டிலை சுமந்துகொண்டு செல்கிறார்கள். எல்லா நேரமும் இப்படித்தான் செய்ய வேண்டுமா என்றால் தேவையில்லை. நீங்கள் இன்னொருவர் வீட்டில் போய் தங்குகிறீர்கள்... அங்கே சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்ற பட்சத்திலோ, அங்கே ஆர்.ஓ பிளான்ட் இருக்கும்பட்சத்திலோ தண்ணீரைச் சுமந்துகொண்டு போக வேண்டியதில்லை.
ஆனால், அதுவே நீங்கள் ஏதோ டிரிப்புக்கு செல்கிறீர்கள் என்ற நிலையில், ஆங்காங்கே வாட்டர் பாட்டில் வாங்குவதைவிட, வீட்டிலிருந்தே நான்கைந்து பாட்டில்கள் தண்ணீர் கொண்டு செல்வதே சிறந்தது. நீங்கள் கடைகளில் வாங்கும் வாட்டர் பாட்டில் எந்த அளவுக்கு சுத்தமானது, ஆர்.ஓ செய்யப்பட்டதுதானா, எத்தனை நாள்களுக்கு முன் பேக் செய்யப்பட்டது என்ற விவரங்கள் தெரியாத நிலையில் அதை வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment