கடந்த 2020-ம் வருடம், மே மாதம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் எனக்கு தலைக்காயம் ஏற்பட்டது. டிரக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை பெற்று வந்த நான், சுமார் மூன்று மாத காலம் சுயநினைவின்றி இருந்தேன். பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். இப்போதும் தினமும் யோகா, இயன்முறை பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்து வருகிறேன்.
எனது இடது கால் விரல்களால் ஹவாய் செருப்பின் பிடியை இறுகப்பற்றிக் கொள்ள முடியாத நிலையில் காலணி கழன்று விடுகிறது. வலது கை மற்றும் விரல்களையும் இயல்பாக அசைக்க முடியாத நிலை... விபத்து நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மெதுவாக சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வலது கால் விரல்களும் இடது கையும் முழுமையாக இயல்பாக அக்குபங்சர் சிகிச்சை பெறலாமா...?
-வீ.வைகை சுரேஷ், விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.
விபத்து நடந்து நான்கு வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity ) எனப்படும் நரம்புகளின் இயக்கம் மெள்ள மெள்ள உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அதாவது தலைமுடி வளர்வதைப் போல, நரம்புகளிலும் ஒருவித வளர்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.
நீங்கள் தொடர்ச்சியாக ஓர் அசைவைச் செய்யச் செய்ய, அது சரியாகிக் கொண்டே வரும். ஓரிடத்தில் நரம்பு செல்கள் அறுபட்டிருந்தால், அதன் பக்கத்தில் உள்ள நரம்பு செல்களுடன் அது தன்னை இணைத்துக்கொள்ள முயற்சி செய்யும். இது நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயம். இந்தச் செயலானது நாம் இறக்கும்வரை தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். இதைத் தான் நியூரோபிளாஸ்டிசிட்டி என்று சொல்கிறோம். உடலில் எங்கே அடிபட்டாலும் இந்த விஷயம் நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் இந்த அளவுக்குத் தேறி வர முடிந்திருக்கிறது.
இப்போது வண்டி ஓட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்... அதை வைத்துப் பார்க்கும்போது உங்களால் உங்கள் கைகளைப் பயன்படுத்த முடிவதாகவே தெரிகிறது. வண்டி ஓட்டுவது, பிரேக் பிடிப்பது, எதிரே யாரேனும் வந்தால் உடனே மூளை தகவல் சொல்லி, கைகள் பிரேக் போடுவதெல்லாம் அனிச்சையான செயல்கள்... இவையெல்லாம் நடப்பதால், உங்கள் உடல்நலம் தேறி வருவதாகவும் இயல்புநிலைக்குத் திரும்புவதாகவும்தான் அர்த்தம். மேற்கொண்டு நீங்கள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை. உங்களுடைய அன்றாட வாழ்க்கை, உங்கள் வேலையின் தன்மை போன்றவற்றுக்கு எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள், இயக்கங்கள் தேவைப்படுகின்றன என்ற தகவல்களும் தெளிவாக இல்லை. நீங்கள் கேட்டுள்ளபடி மாற்று மருத்துவங்களைத் தாராளமாக முயற்சி செய்யலாம்.
உங்களுடைய கடிதத்தில் விரிவான வேறு தகவல்கள் இல்லாததால் இது குறித்து நிறைய விளக்க முடியவில்லை. உங்களை ஒருமுறை நேரில் சந்தித்து, உங்கள் கடந்த கால பிரச்னைகள், சிகிச்சை பின்னணி போன்றவற்றைத் தெரிந்துகொண்டால் அடுத்தகட்ட சிகிச்சைகளைப் பரிந்துரைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment