வெளிநாட்டுக் கலாசாரமாக இருந்த டேட்டிங் பற்றி 1980 மற்றும் 90-களில் தெரிய வந்தபோது, 'இப்படியெல்லாம்கூட இருப்பார்களா' என்று யோசித்த சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைக்கு அந்த கலாசாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கான செயலிகள்கூட வந்துவிட்டன. பெற்றோர் பார்த்து செய்கிற திருமணம்போலவே, ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அவரை நன்கு புரிந்துகொண்டு திருமணம் செய்கிற முறையும் இன்றைக்கு பலரிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், 'டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்வது ஓகே தானா' என்கிற கேள்வி, சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டே இருக்கிறது. இதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் பேசினோம்.
''ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அது பொருந்தாதபட்சத்தில், இன்னும் சிலருடன் டேட்டிங் செய்து தனக்கான ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுப்பது வளர்ந்த நாடுகளில் நடந்துக்கொண்டிருக்கிற இயல்பான விஷயம். அவர்கள் கலாசாரத்தில் திருமணத்துக்கு முன்னரே செக்ஸ் என்பதும் பதறக்கூடிய ஒன்றாக பார்க்கப்படவில்லை. அதற்காக, அவர்கள் டேட்டிங் செய்த முதல்நாளே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என்று அர்த்தமில்லை. பழகி, ஒருவரையொருவர் பிடித்துவிட்டால், வைத்துக்கொள்வார்கள். அங்கு இது வழக்கமான விஷயம்தான். திருமணத்தின்போது, இருவரும் வர்ஜினாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைப் பெற்றுக்கொண்ட பிறகுகூட அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால், பாலியல் தொடர்பாக வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும்போது நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன். ஒரு கருத்தரங்கில் முதலிரவில் நடக்கிற பிரச்னைகள் பற்றி இந்திய மருத்துவர்கள் பேசும்போது, அவர்கள் முதலிரவுப்பற்றி விளக்கும்படி கேட்டார்கள். அப்போது, முன் பின் பழக்கமில்லாத ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதையும், திருமணமான அன்றைய தினம் அவர்கள் உறவுகொள்வதையும் விளக்கினேன். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பேசிப்பழகாத இருவர் எப்படி திருமணமான அன்றே உறவுகொள்ள முடியும் என்றார்கள். இதுதான் எங்கள் நாட்டு வழக்கம் என்றேன்.
தற்போது, வளர்ந்த நாடுகளின் டேட்டிங் கலாசாரம் நம் நாட்டிலும் வந்துவிட்டது. இதில், டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டால், உலக சுகாதார மையம் சொன்னதைதான் நானும் வழிமொழிய விரும்புகிறேன். அதாவது, எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்காக முதல் உறவை திருமணம் வரை தள்ளிப்போடுங்கள் என்கிறது, உலக சுகாதார மையம். அப்படியே வைத்துக்கொண்டாலும், ஆடையுடன் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறது. இதுவும் முடியவில்லை என்றால், ஆணுறையாவது அணிந்துக்கொள்ளுங்கள் என்கிறது.
இப்போது நம் நாட்டுப் பெண்கள் விஷயத்துக்கு வருகிறேன். தானாக ஓர் ஆணை தேர்ந்தெடுத்து காதலித்தாலும் சரி, பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை காதலித்தாலும் சரி, காதலிப்பது நல்லது. அப்போதுதான் இருவருமே ஒருவரைப்பற்றி ஒருவர் ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும். தவிர, அவர்களால் திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளையும் ஓரளவுக்காகவது முன்கூட்டியே கணிக்க முடியும். அதனால், டேட்டிங் செய்து ஓர் ஆணைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், டேட்டிங்கின்போதே செக்ஸை தவிர்ப்பது நல்லது. அது திருமணத்துக்குப் பின்னரே நடக்கட்டும்'' என்கிறார், டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Comments
Post a Comment