Skip to main content

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா?


பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.  

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

கரு ஓரளவு வளர்ந்த பிறகு அபார்ஷன் செய்யப்பட்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். கரு முழுவதுமாக கலையாமல் உள்ளே தங்கி, இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம். இதனால் அரிதாக  உடலின் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். அபார்ஷனில் கர்ப்பப்பையில் ஏதோ புண் ஏற்படுகிறது என்றால் எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனாலும் அது அரிதானது.   அடிக்கடி டி அண்ட் சி செய்வதாலும், நோய்த்தொற்று அல்லது முழுமையாக வெளியேற்றப்படாத கரு போன்றவற்றின் காரணமாக  சிலருக்கு  கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியல் திசுவில் தழும்பு ஏற்படும். இப்படித் தழும்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், குழந்தை தங்காமல் போகலாம். தழும்பு ஏற்படும் இந்தப் பிரச்னைக்கு  'ஆஷர்மேன்ஸ் சிண்ட்ரோம்' (Asherman's syndrome) என்று பெயர்.  

Abortion (Representational Image)

அறுவை சிகிச்சையின் மூலம் அந்தத் தழும்பை நீக்குவதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். ஆனால், சிலருக்கு 'கிளமேடியா (Chlamydia), கொனோரியா (Gonorrhea) போன்ற பால்வினை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, அதன் விளைவாக எதிர்காலத்தில்  கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உண்டாகலாம். அதற்காக அபார்ஷன் செய்துகொள்கிற எல்லோருக்கும் இந்தத் தொற்றும், கருக்குழாய் அடைப்பும் ஏற்படும் என்று அர்த்தமில்லை.  

அடிக்கடியும், பாதுகாப்பற்ற முறையிலும் செய்யப்படும் அபார்ஷன், மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்குகளை முறையாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். 

உங்கள் விஷயத்தில் குழந்தையின்மைக்கான பிற காரணங்களையும் ஆராய வேண்டும். ஏஎம்ஹெச் (AMH) எனப்படும் 'ஆன்டிமுலேரியன் ஹார்மோன்' அளவுகளைப் பார்க்க வேண்டும். அதில் உங்களுடைய கருத்தரிக்கும் திறனைத் தெரிந்துகொள்ள முடியும். வயதாக, ஆக கருத்தரிக்கும் திறன் குறையும் என்றாலும் 30 வயதில் அது பெரிய அளவில் குறையாது. எனவே, மருத்துவரைக் கலந்தாலோசிப்பது சிறந்தது. 

சமீப நாள்களில் உங்களுக்கு உடல் பருமன் அதிகரித்தது, சிகரெட், போதை மருந்துப் பழக்கம் போன்ற பழக்கங்களுக்கு உள்ளானது என ஏதேனும் நடந்திருந்தாலும், அவையும் கருத்தரிக்கும் திறனை பாதிக்கும். பால்வினை நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, அடிவயிற்றில் வலி, வெள்ளைப்படுதல், கருக்குழாய் அடைப்பு போன்றவை இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். அடுத்து உங்கள் கணவரின் வயது, அவரது உடல்நலம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும். அவருக்கு விந்தணுப் பரிசோதனை செய்ய வேண்டும்.

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்

முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து மேற்குறிப்பிட்ட தழும்பு இருக்கிறதா, நார்மலாக இருக்கிறதா என்று பாருங்கள். 'டியூபல் பேட்டன்சி டெஸ்ட்' (Tubal Patency Test) எனப்படும் ஹெச்.எஸ்.ஜி டெஸ்ட் மூலம் கருக்குழாய்களில் அடைப்பிருக்கிறதா என கண்டறியலாம். எல்லா டெஸ்ட்டுகளும் நார்மல் என்றால் பயப்பட வேண்டாம். அதே நேரம் முந்தைய அபார்ஷனின் விளைவால்தான் கருத்தரிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்காமல், உடனடி மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் தொடங்கப்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...