Skip to main content

உடல் நலப் பிரச்னை; ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய ‘Green Salt’ - மூலிகை உப்பு பிசினஸில் அசத்தும் பெண்!

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி.

பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் ‘Homepreneur Award’ என்ற சுயசக்தி விருதைப் பெற்ற உமா மகேஸ்வரியின் பயணம் இது...

Arshitha Food Products என்ற தமது சொந்த நிறுவனத்தின் மூலம் Green Salt என்ற பெயரில் மூலிகை கலந்த உப்பைத் தயாரித்து வருகிறார்.

55 வயதாகும் உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தற்போது அவரது Arshitha Food Products நிறுவனம், சென்னை - ஆதம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.

தொழில் பயணம் ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே தொடங்கும்!

உமா மகேஸ்வரி சுமார் பத்து ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து, பல மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்தும் அவருக்கு எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கவில்லை. உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்ட காலத்தில், ஒரு சித்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையின்படி முருங்கை இலை கலந்த உப்பைத் தயாரித்து பயன்படுத்தினார்.

தொடர்ந்து ஆறு மாதங்கள் பயன்படுத்திய பிறகு, தனது ஹீமோகுளோபின் அளவு 7-ல் இருந்து 10 ஆக உயர்ந்ததாகவும், உடல் சோர்வு குறைந்ததாகவும் பகிர்ந்துகொள்கிறார்.

“நமக்குப் பயனுள்ளதாக இருந்ததை மற்றவர்களுக்கும் கொடுக்கலாமே” என்ற எண்ணம்தான் அடுத்தகட்ட முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக Green Salt தயாரித்து வரும் இவர், ஆரம்ப முதலீடாக ரூ.1,000-ல் தனது தொழில் பயணத்தைத் தொடங்கி, தற்போது மாதம் சுமார் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஆரம்பத்தில் சமூக சேவை நோக்கத்தில் சில மாதங்கள் இலவசமாக இந்த உப்பை மக்களுக்கு வழங்கியிருக்கிறார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு, இதை ஒரு தொழிலாகத் தொடங்கியிருக்கிறார்.

முருங்கை, முடக்கத்தான், தூதுவளை, கரிசலாங்கன்னி, வல்லாரை, துத்திக் கீரை, முக்கிரட்டை என ஏழு வகையான மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு உப்புகளைத் தயாரித்து வருகிறார்.

ஒவ்வொரு மூலிகையையும் குறிப்பிட்ட முறையில் சுத்திகரித்து, அளவோடு பயன்படுத்த வேண்டும். வழக்கமாக ஒரு ஸ்பூன் உப்பு பயன்படுத்தும் இடத்தில், Green Salt-யை அரை ஸ்பூன் பயன்படுத்தினாலே போதுமான உப்புத்தன்மை கிடைக்கும். இந்த முயற்சிக்கு EDII உள்ளிட்ட அமைப்புகளின் ஊக்கத்தொகையும், ஆதரவும் கிடைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), Green Salt-யை innovative product ஆக அங்கீகரித்து, COXBIT-ல் அவருக்கென தனி cabin ஒன்றையும் வழங்கியுள்ளது. Green Salt-க்கு FSSAI அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ஏழு கீரைகள்… ஏழு விதமான பயன்பாடுகள்!

முருங்கைக்கீரை உப்பு: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான முக்கியத் தாதுக்கள் (Minerals) மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

முடக்கத்தான் உப்பு: கால் வலி, நரம்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

தூதுவளை உப்பு: சளி மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கரிசலாங்கன்னி உப்பு: கல்லீரல் ஆரோக்கியத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த உப்பைப் பயன்படுத்தியதன் விளைவாக, தனது கணவரின் LDL கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

வல்லாரைக்கீரை உப்பு: நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், இரவில் அமைதியான தூக்கத்திற்கும் துணைபுரிகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாடு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

துத்திக் கீரை உப்பு: நார்ச்சத்து மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் piles போன்ற பிரச்னைகளுக்கும் பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிரட்டை உப்பு: பாத எரிச்சல் மற்றும் கணுக்கால் வலி போன்ற பிரச்னைகளுக்கு உதவுகிறது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் இதைத் தங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும். மேலும், வைட்டமின் B12 தொடர்பான பிரச்னைகள் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கும்‌ உதவுகிறது.

தொழிலுடன் தொடரும் ஆர்வங்கள்!

உமா மகேஸ்வரி தொழிலில் மட்டுமல்லாமல், மாடித்தோட்டம் அமைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். வீட்டில் செடிகள் வளர்ப்பதிலும், அவற்றைப் பராமரிப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், தையல் கலையிலும் ஆர்வம் கொண்டு, தையல் செய்வதையும் விரும்பி வருகிறார்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

“உடல்நலப் பிரச்னைகளில் நிவாரணம் கிடைக்க உதவவேண்டும் என்பதுதான் எங்களோட நோக்கம். இந்தத் தயாரிப்பு இன்னும் நிறைய மக்களிடம் போய்ச் சேரணும்” என்கிறார். Green Salt-ஐ அரசு சார்ந்த துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது அடுத்தகட்ட எண்ணம். குறிப்பாக, தனியார் துறையில் பள்ளி, கல்லூரி விடுதிகள், நிறுவனங்களின் உணவகங்கள் போன்ற இடங்களிலும் Green Salt பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பதே அவரது நோக்கம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...