Doctor Vikatan: வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியைத் தந்தது.
அதாவது, குளிர்ச்சியான அல்லது அதிக சூடான நீரில் குளிக்கும்போது, சிலருக்கு அது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம் என்றும், குளியலறையில் நிகழும் மாரடைப்புகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது.
தலையில் நேரடியாகத் தண்ணீரை ஊற்றுவது ஆபத்தை அதிகரிக்கும் என்றும், முதலில் கால்கள், பிறகு உடல், இறுதியில் தலை எனக் குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுவது இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இதை எப்படிப் புரிந்துகொள்வது? குளிர்ந்த நீரில் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
மிகவும் அதிகமான வெப்பநிலை மாற்றங்களுக்குத் திடீரென ஆட்படுவது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை (strain) ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குளிக்கும்போது எப்போதாவது ஒருமுறை இப்படிப்பட்ட இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அதற்கு தண்ணீர் ஊற்றும் முறை காரணமாவதில்லை. மாறாக, திடீரென மாறும் நீரின் வெப்பநிலை (அதிக குளிர் அல்லது வெப்பம்), ஏற்கெனவே உள்ள இதயப் பிரச்னைகள் மற்றும் வயது முதிர்வு ஆகியவையே காரணங்களாக இருக்கும்.
அதிக சூடான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றனவே தவிர, தலையில் முதலில் தண்ணீர் ஊற்றுவது மாரடைப்பை உண்டாக்கும் என்பதற்கோ, குறிப்பிட்ட வரிசையில் குளிப்பது அதைத் தடுக்கும் என்பதற்கோ எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
மிகவும் குளிர்ந்த அல்லது வெந்நீர் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். இது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆபத்தானது.
திடீர் வெப்பநிலை மாற்றம் (மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீர்), முதுமை, ஏற்கெனவே உள்ள இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயச் செயலிழப்பு போன்ற காரணங்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி இது போன்ற தகவல்களை எல்லோருக்குமானதாக நினைத்து பயப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment