Skip to main content

Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan:  நடிகர் ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக செய்திகளில் கேள்விப்படுகிறோம். குறைந்த ரத்த அழுத்தம் என்பது உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தான பிரச்னையா... எந்த அளவு வரை குறைந்தால் எச்சரிக்கையாக வேண்டும்... அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்... குறைந்த ரத்த அழுத்தம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

நடிகர் ராஜேஷின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும். யூகங்களின் அடிப்படையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

பொதுவாக, 90/60 mm Hg -க்கும் குறைவாக ரத்த அழுத்தம் இருந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று கருதப்படுகிறது.  மருத்துவ மொழியில் இதை 'ஹைப்போடென்ஷன்'  (Hypotension ) என்று குறிப்பிடுகிறோம்.

சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ஆனால், 90/60 mm Hg-க்கும் குறைவாகப் போகும்போது அந்த நபருக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.

குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பது, நெஞ்சுலி, குழப்பம், அதீத களைப்பு,  இதயத்துடிப்பில் அடிக்கடி பிரச்னை (Arrhythmias) போன்றவை ஏற்படலாம்.

குறை ரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதயம் தொடர்பான பிரச்னைகளோ, கிட்னி பிரச்னைகளோட இருந்தால் குறை ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம்.

100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது பயப்பட வேண்டிய நிலையல்ல.

ரத்தச்சோகை எனப்படும் அனீமியா பாதிப்பிலும் இப்படி வரலாம். தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும் சாதாரண காரணத்தாலும் ஏற்படலாம்.

உடற்பயிற்சி செய்துவிட்டு நிறைய  வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறையலாம்.

நரம்பு மண்டலச் செயல்பாட்டில் ஏற்படுகிற பிரச்னை (Autonomic dysfunction)  காரணமாகவும் சிலருக்கு ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையலாம்.

ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும் சில ரிசப்டார்ஸ் (Receptors) சரியாக வேலை செய்யாததாலும் ரத்த அழுத்தம் குறையலாம். ஏதேனும் பிரச்னைகளுக்காக எடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவாலும் குறையலாம். எனவே, பொதுவாக ஒரு நபர் லோ பிளட் பிரஷர் பிரச்னையோடு வந்தால், முதலில் அவர்களது பிபி அளவை சரிபார்ப்போம். அறிகுறிகளைக் கேட்போம். அவற்றை வைத்து ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ என தேவைப்படும் டெஸ்ட்டுகளை பரிந்துரைப்போம்.

ஹைப்போடென்ஷனில் 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன்' (Orthostatic hypotension) என்றொரு வகை இருக்கிறது. இதில் படுத்திருந்த நிலையில் இருந்து உட்காரும்போதும், உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்கும்போதும் ரத்த அழுத்தம் குறையும். பிபி அளவைக் குறிப்பிடும்போது மேலுள்ள எண்ணை சிஸ்டாலிக் பிளட் பிரஷர் (Systolic blood pressure) என்றும், கீழுள்ள எண்ணை டயஸ்டாலிக் பிளட் பிரஷர் (Diastolic blood pressure) என்றும் சொல்வோம்.

இதில் சிஸ்டாலிக் பிளட் பிரஷரானது 20 பாயின்ட்டுகளாகவும், கீழுள்ள டயஸ்டாலிக் பிளட் பிரஷரானது  10 பாயின்ட்டுகளாகவும் குறைந்திருந்தால், அதை  ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன் என்று சொல்வோம்.

டீஹைட்ரேஷன், இதயநல பாதிப்பு, கர்ப்பம், மருந்துகளின் பின் விளைவு என பல காரணங்களால் வரும். சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இதையும் மருத்துவர்கள் செக் செய்வார்கள்.

பிபி அளவு 90/60 mm Hg க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பொதுவாக வயதானவர்களிடம் இந்தப் பிரச்னை வரும்போது சற்று எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இளவயதினரிடம், குறிப்பாக பெண்களில் சிலருக்கு லோ பிளட் பிரஷர் இருக்கலாம். அவர்கள் ஆக்டிவ்வாக இருக்கும்போது அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.

அவர்களும் பிபி அளவு 90/60 mm Hg -க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் இல்லாதவரை, இளவயதினருக்கு மருத்துவர்கள் எந்தச் சிகிச்சையையும் பரிந்துரைக்க மாட்டோம். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்துவோம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...