Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.
உணவில் புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தசைகளின் அடர்த்தி குறையும். எடையைக் குறைப்பது கடினமாகும். வே புரோட்டீன் சாப்பிட பயப்படுகிறவர்கள், வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
வீட்டிலேயே நீங்கள்தான் தயாரிக்கப் போகிறீர்கள் என்பதால் அதில் செயற்கையான பொருள்களையோ, கெமிக்கலையோ சேர்க்கப்போவதில்லை. அதைச் செய்வதும் ரொம்பவே சிம்பிள். பட்ஜெட்டும் பிரச்னையாகாது.
ஹோம் மேடு புரோட்டீன் பவுடர் தயாரிக்க வால்நட்ஸ், பாதாம், பூசணிவிதை, சூரியகாந்தி விதை, பொட்டுக்கடலை மற்றும் சியா சீட்ஸ் ஆகிய அனைத்திலும் தலா 60 கிராம் எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றையும் வெறும் கடாயில் குறைந்த தணலில் வைத்து வறுத்தெடுக்கவும்.
வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து ஆறவைத்து மிக்சியில் நைசாகப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் 4 டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும். வொர்க் அவுட்டுக்கு பிறகு இதைக் குடிப்பது உங்கள் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும். தினமும் குடித்து வந்தால் புரதச்சத்துக் குறைபாடு நீங்கும். எடையைக் குறைப்பது எளிதாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment