Skip to main content

பள்ளிகளில் விலையில்லா நாப்கின் திட்டம் எப்படி செயல்படுகிறது? தமிழக ரவுண்ட் அப்! | #MHDay2023

ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது உள்ளிட்டவையே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கம்.

என்னதான் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் நாம் பின்தங்கியிருக்கிறோம். அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில நம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும்.

மாதவிடாய்

சிறுமியர், மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்கச் செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு `புதுயுகம்' என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நேப்கின்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த திட்டத்தின் தற்போதைய செயல்பாடு எந்தளவில் உள்ளது, சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதன் நோக்கம் மாணவிகளுக்கு நிறைவேறி உள்ளதா? இதுகுறித்து, விகடன் நிருபர் குழு, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகள் சிலரை சந்தித்துப் பேசியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லில்லி கூறுகையில், ``மாணவிகளின் சுகாதாரத்தில் அதிக கவனமாக இருக்கிறோம். அவர்களின் மாதவிடாய் சிரமத்தைப் போக்க, பள்ளியில் கழிவறை அருகே ஓர் அறையில், அரசு வழங்கும் சானிட்டரி நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதனை, ஆசிரியைகளின் உதவியோடு மாணவிகள் எடுத்துப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்.

அரசால் வழங்கப்படும் நாப்கின், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை என ஒவ்வொரு முறையும் மூன்று பாக்கெட் வழங்கப்படுகிறது. 5-ம் வகுப்பிலேயே சிலர் பருவம் அடைந்திருந்தால், அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. நாப்கின் விநியோக விவரங்கள் மாணவிகளின் கையொப்பங்களுடன் கணக்கிடப்படுகிறது" என்றார்.

நாப்கின்

நாப்கின் எரிக்கும் மெஷின் தேவை!

சேலம் ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் பள்ளி மற்றும் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு மாணவிகளிடம் பேசியபோது ``அரசு சானிட்டரி நாப்கின்கள், வருடத்திற்கு குறைந்தது 6 பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஏழ்மை நிலை மாணவிகளுக்கும், குடும்பத்தில் அதிக பெண்கள் இருக்கும் மாணவிகளுக்கும் அதிக நாப்கின்கள் வழங்கப்படுகின்றன" என்றனர்.

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் நம்மிடம் பேசியபோது, ’’போதுமான அளவில் மாதவிடாய் நாப்கின்கள் அரசு தரப்பில் தரப்படுகிறது. போதாமல் கூடுதல் நாப்கின் கேட்டாலும் தருகின்றனர். நாப்கின் தரமாக உள்ளது. நிதிச்சுமையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு இது பேருதவியாக உள்ளது’’ என்றனர். ஒரு சில தனியார் அமைப்புகளும் இச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.

மதுரை மற்றும் பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ``ஒவ்வொரு பருவத்துக்கு‌ ஒருமுறையும் பள்ளிகளுக்கு நாப்கின் கொண்டு வந்து தரப்படுகிறது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செவிலியர் ஒருவர் பொறுப்பாக இருந்து இதனை வழங்குவார். ஆசிரியர் ஒருவரும் பொறுப்பாக இருந்து மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப வாங்கி வருவார். அரசுப் பள்ளியென்றால் எதுவும் சரியாக இருக்காது என்ற பார்வை உள்ளது. ஆனால் இங்கு எல்லாமே முறையாகச் செய்கிறோம். அரசின் இலவசப் பொருள்களை பிள்ளைகளுக்குச் சரியான முறையில் வழங்குவதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரம், நாப்கினை முறையாக அப்புறப்படுத்தும் வசதியின்றி சிரமப்படுகிறோம். எனவே, பயன்படுத்திய நாப்கினை எரிக்கும் சாதனத்தை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்" என்றனர்.

விஜயராணி

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்!

மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் ஜோதி மேல்நிலைப்பள்ளியில், இதற்கான பொறுப்பாசிரியரான விஜயராணியிடம் பேசினோம். ``நாப்கின் வழங்கும் விவரங்களை பரமாரிக்க தனி நோட் வைத்திருக்கிறோம். மாணவிகளின் கையெழுத்தைப் பெற்ற பிறகே வழங்குகிறோம். அவ்வப்போது மாணவிகளுக்கு கூட்டம் நடத்தி, நாப்கின் பயன்பாடு, மாதவிடாய் சுகாதாரம், பயன்படுத்தியதை அகற்றும் முறை, எரிக்கும் மெஷினை பயன்படுத்துவது குறித்து சொல்லித் தருகிறோம்" என்றார்.

அப்பள்ளியின் மாணவி ஒருவரிடம் பேசியபோது, ``எங்கள் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். வகுப்பில் பீரோ பக்கத்தில் உள்ள அட்டைப் பெட்டியில் இருந்து, தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், பயன்பாட்டுக்குப் பிறகு மாடியில் உள்ள எரிக்கும் மெஷினில் எரிந்த்துவிடலாம்" என்றார்.

நாப்கின் எரிக்கும் இயந்திரம்

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி நிலைப்பள்ளி மாணவிகளிடம் பேசினோம். ``எங்களுக்கு இந்த வருடத்திலிருந்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று பாக்கெட் நாப்கின் வழங்குகிறார்கள். இதனால் சுகாதாரமாக இருக்க முடிகிறது. வெளியே வாங்கும் தேவை ஏற்படுவதில்லை என்பதால், வீட்டிற்கும் உதவிகரமாக உள்ளது" என்றனர்.

அப்பள்ளியின் தாளாளர் மேரி கூறுகையில், "எங்கள் பள்ளிக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இலவச நாப்கின்கள் அளிக்கப்படுகின்றன. நாப்கின் வழங்கவும், அதைச் சார்ந்த செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் தனி ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளோம். மாதவிடாய் சுகாதாரம், அது குறித்த விழிப்புணர்வை மாணவிகளுக்கு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

விதிமீறல்களும் உள்ளன!

இலவச நாப்கின் திட்டத்தால் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம், ஒருசில பள்ளிகளில் மாணவியரிடம் பேசியபோது சில விதிமீறல்கள் நடப்பதும் தெரிய வருகிறது. சானிட்டரி நாப்கின்களை, மாணவிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் சிலர், அப்பணியை முறையாகச் செய்வதில்லை. நாப்கின் வழங்குவதற்கு மாணவிகளிடம் பணம் வசூலிப்பது, மூன்று நாப்கின் பாக்கெட்டுகள் கொடுக்கும் இடத்தில் இரண்டு பாக்கெட்டுகள் மட்டும் தருவது, மாணவிகளுக்கான விலையில்லா நாப்கின் பாக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

அரசின் விலையில்லா நாப்கின்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி முன்னாள் மாணவி ஒருவர், தான் பள்ளியில் படித்த போது பள்ளி நிர்வாகம் ஒரு நாப்கினை 20 ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்கியதாகக் கூறினார். அரசுப் பள்ளிகளை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இப்பள்ளிகளுக்கு அரசு நாப்கின் வழங்குகிறது. இதனால் ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை இரண்டு பாக்கெட்டுகள் தான் கிடைப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். அதேபோல், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலரும், மாணவிகளுக்கான விலையில்லா நாப்கினை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அரசின் விலையில்லா நாப்கின் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம், அதை எரியூட்டத் தேவையான சாதனங்களையும் வழங்க வேண்டும். அதேபோல், சில இடங்களில் இத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைக் களைய வேண்டும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...