Doctor Vikatan: எலும்புகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? எனக்கு முழங்கைகளில் வலி உள்ளது. அதற்கான தீர்வையும் சொல்லவும். - Shiva Kumar, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் | சென்னை எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம். கூடவே உடற்பயிற்சிகளும் மிக அவசியம். அதாவது வெயிட் டிரெயினிங் பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும். பால் மற்றும் பால் உணவுகள் அனைத்திலும் கால்சியம் சத்து இருக்கும். முருங்கைக்காய், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவை எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிப்பவை. பிரண்டையில் எலும்புகளை வலுவாக்கும் பிரத்யேக தன்மை உண்டு. எனவே பிரண்டையை அடிக்கடி துவையல் வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். முழங்கை மூட்டுகளில் வலி என்பது அடிபட்டதால் வரலாம், அந்த அடியானது தசையிலோ, தசைநாரிலோ, எலும்பிலோ பட்டதால் ஏற்பட்டதாக இருக்கலாம். கிருமித் தொற்றினால் சீழ்ப்பிடித்து அதனாலும் வலி வரலாம்...