இன்றைய தேதியில், மாணவர்கள் கல்வி பயிலும் வயதிலேயே அவர்களின் அடுத்த கட்டத்திற்கான திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதற்கான வாய்ப்புகளும் பல மேடைகளில் பரந்து விரிந்திருக்கின்றன. திறமையுடன் அந்த மேடையைச் சரியாகப் பயன்படுத்திய மாணவர்கள் பல அனுபவங்களைக் கற்றுத் தேர்ந்திருப்பார்கள்.
அதுபோல தனது இளம் பருவத்திலேயே `யுனைடெட் வீ பிளே' என்கிற திட்டத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்குச் சென்று கால்பந்து விளையாடி இந்தியா திரும்பியிருக்கிறார் 17 வயதான பிரியரஞ்சன். அவரை சந்திக்க ஓர் அந்தி சாய்ந்த பொழுதில் அவரது வீட்டிற்குச் சென்றேன். மான்செஸ்டரில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை நம்மிடையே பகிரத் தொடங்கினார்.
"யுனைடெட் வீ பிளே என்கிற திட்டத்தின் மூலம் மான்செஸ்டருக்குச் சென்று திரும்பியிருக்கிறேன். விசா கிடைத்தவுடன் மான்செஸ்டருக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்தேன். அந்த ஒரு வாரம் எனக்கு அங்குப் பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. 'யுனைடெட் வீ பிளே' திட்டத்தின் தேர்வு முறையில் முதலில் கால்பந்தாட்டத்தில் அடிப்படையில் சில நுணுக்கங்களை எதிர்பார்ப்பார்கள். அதன் பிறகு குழுக்களைப் பிரித்து விளையாடச் செய்வார்கள். இதிலிருந்து சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இறுதியில் தகுதிபெற்ற நால்வரை மான்செஸ்டருக்கு அழைத்துச் சென்றார்கள். மார்ச் 13-ம் தேதி இங்கிருந்து புறப்பட்டு மார்ச் 22-ம் தேதி இந்தியா திரும்பிவிட்டோம். மான்செஸ்டருக்கு சென்ற இரண்டாவது நாளிலேயே எங்களுக்கான பயிற்சி தொடங்கிவிட்டது. மான்செஸ்டரிலுள்ள விளையாட்டு அரங்கமே எங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. அங்குள்ள பயிற்சிகள் முதலில் கடினமாக இருந்தன. அங்கு கற்றுக்கொடுக்கக்கூடிய நுணுக்கங்கள் முற்றிலும் வேறுபட்டவை.
அங்கு ரபேல் வரேன், டாலோட், சார்லி ஆகிய கால்பந்தாட்ட வீரர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடனான உரையாடல் பல அறிவுசார் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பதாக அமைந்தது.
மான்செஸ்டர் சென்றதுமே நாங்கள் முதலில் சந்தித்தது வெஸ்ப்ரவுண்தான். அவர் எப்போதும் மற்றவர்களை ஊக்கமளிப்பதற்குத் தவறியதில்லை. இந்த வயதில் அவரது ஃபிட்னஸ் வியக்கவைக்கிறது. ஒரு கால்பந்தாட்ட வீரருக்குக் கடின உழைப்பு, விளையாட்டில் திறமையாக இருப்பது மட்டும் போதுமானதல்ல... ஒழுக்கமாக, ஆரோக்கியமாக இருப்பதுதான் ஒரு வீரரை மேம்படுத்தும் என்பதை எனக்குப் புரிய வைத்தது அவர்தான். 90களில் திகழ்ந்த முக்கியமான கால்பந்தாட்ட வீரரான அவருக்குப் பல அனுபவங்கள் இருக்கும். அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எங்களை அவரிடம் பலவற்றை உரையாட அழைத்துச் சென்றது. கேட்டவை அனைத்துக்கும் சலிக்காமல் பதிலளித்தார்.
அங்குள்ள வானிலை முற்றிலும் வேறுபட்டது. காலையில் 10 மணிக்குப் பயிற்சி தொடங்கும். முதலில் 20 நிமிடங்கள் வார்ம் அப் செய்வோம். அங்குள்ள குளிர் வானிலைக்கு நமது உடல் எளிதாகத் தயாராகிவிடாது. அங்குப் பல சவால்களைச் சந்தித்தேன். முதலில் அங்கு மொழி தடையாக இருக்கும். அங்குள்ள அனைவரும் ஆங்கிலம் மட்டும் பேசமாட்டார்கள். ஸ்பானிஷ், பிரெஞ்ச் வீரர்களும் அங்கே இருப்பார்கள்" என்றவர், தனது பயிற்சிக்காலம் குறித்தும் அவரது கால்பந்தாட்ட கரியர் குறித்தும் பகிரத் தொடங்கினார்.
"ஒரு கால்பந்தாட்ட வீரருக்குக் காலை 2 மணி நேரப் பயிற்சி மட்டும் போதுமானதல்ல. மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். எனக்குப் பள்ளிப் பருவத்தில்தான் கால்பந்தாட்டம் மீது ஆசை வந்தது. 9 வயதிலிருந்து பள்ளியிலுள்ள கால்பந்தாட்ட அணிக்கு விளையாடி வருகிறேன்.
இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அகாடமியில் சேர்ந்தேன். அதன் பிறகு சென்னையின் எப்.சியில் இணைவதற்குப் பல முயற்சிகளை முன்னெடுத்தேன். அந்த முயற்சி வெற்றிகரமானதாக அமைந்தது. எனது 11 வயதிலிருந்து சென்னையின் எப்.சிக்காக விளையாடி வருகிறேன். அண்டர் 13, 15 ஆகிய அணிகளைத் தொடர்ந்து இப்போது அண்டர் 17-ல் விளையாடி வருகிறேன். குறைந்த வயதிலேயே சென்னையின் எப்.சிக்கு கீ-பிளேயராக இருக்கிறேன்" என்றார்.
பிரியரஞ்சனுக்கு அவரது தந்தைதான் கால்பந்தாட்டத்தில் முதல் ஆசானாம். பிரியரஞ்சனின் தந்தையும் கால்பந்தாட்ட வீரர்தான். அவரிடம் பேசுகையில்,
"நான் ஒய்.எம்.சி.ஏ ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில்தான் படித்தேன். முதலில் என் மகன் பள்ளியிலுள்ள கால்பந்தாட்ட அணியில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்குத் தொடக்கப்புள்ளியாக நான் இருந்தேன், அதன் பிறகு அவராகவே அவரை வளர்த்துக் கொண்டார். இப்போது சென்னையின் எப்.சி அணிக்கும் விளையாடி வருகிறார். மான்செஸ்டருக்குச் சென்று திரும்பியிருக்கிறார்" என்று பேசியவரின் கண்களில் அவ்வளவு பெருமிதம். தந்தை பேசும்போதே பிரியரஞ்சன், "அப்பாதான் எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷன்" எனக் கூறி விடைபெற்றார்.
பிரியரஞ்சனின் கனவுகள் பலிக்கட்டும்!
Comments
Post a Comment