Skip to main content

How To: சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How To Prevent Urinary Tract Infection?

சிறுநீர்ப்பாதைத் தொற்று (Urinary Tract Infection) என்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சிறுநீர்ப்பாதை சார்ந்த முக்கியப் பிரச்னை. இதன் விளைவாக, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம். சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது எப்படி என விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ்…

சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ் | சென்னை.

``சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரை உள்ளதுதான் சிறுநீர்ப்பாதை. இந்தப் பாதையில் ஏற்படும் தொற்றினைத்தான் சிறுநீர்ப்பாதை என்கிறோம். சிறுநீர்ப் பாதையில் இத்தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரகத்திலேயே கூட ஏற்படும். இது யாருக்கெல்லாம் பொதுவாக ஏற்படுகிறது என்று பார்த்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்துகள் உட்கொள்கிறவர்கள், ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது.

சிலருக்குப் பிறப்பிலேயே சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இருக்கும், சிறுநீரக வளர்ச்சியில் குறைபாடு இருக்கும். அவர்களுக்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தொற்று உடலுக்குள்ளேயே ரத்தத்தில் உண்டாகி, சிறுநீர்ப் பாதைக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வெளியே உள்ள கிருமிகள் சிறுநீர் வெளியேறும் துவாரத்தின் வழியாக உட்புகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் கழிப்பறையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

சிறுநீர்ப்பாதைத் தொற்றானது பால்வினை நோய்களுக்குள் வராது என்றாலும், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடனான உடலுறவின் விளைவாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்வது அவசியம். உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்பை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மெனோபாஸ் ஆன பெண்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதையில் எரிச்சல் இருக்கும்.

மெனோபாஸ்

மெனோபாஸுக்கு முன்புவரை, அவர்கள் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் சிறுநீர்ப் பாதையை ஈரத்தன்மையோடு வைத்திருக்கும். மெனோபாஸுக்குப் பிறகு ஹார்மோன் உற்பத்தி இல்லாமல் போவதால் சிறுநீர்ப்பாதை வறண்டு போய் விடுகிறது. இதனால் அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். அது சிறுநீர்ப்பாதைத் தொற்றின் காரணமாக ஏற்படும் எரிச்சலாகவும் இருக்கலாம் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களில் 60 சதவிகிதம் பேர், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சிறுநீர்ப்பாதைத் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். 40 சதவிகிதப் பெண்கள், பலமுறை இத்தொற்றுக்கு ஆட்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆசனவாயும், சிறுநீர்ப்பாதையும் மிக நெருக்கமாக இருப்பதால் ஆசனவாயில் உற்பத்தியாகும் கிருமிகள் சிறுநீர்ப்பாதைக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு வயதான பிறகு விதைப்பையில் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சிறுநீரகம்

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அதுவும் சிறுநீர்ப்பாதைத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். 5 வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் சிறுநீர்ப் பாதையில் அடைப்போ, தொற்றோ ஏற்பட்டிருக்கலாம். அதை பரிசோதிக்க வேண்டும். சிறுநீர்ப்பாதைத் தொற்று தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், அது சிறுநீரக பாதிப்புக்கும் வழி வகுக்கும். எனவே, இத்தொற்றுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்வது அவசியம்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் நாளொன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததன் மூலம், சிறுநீர் உள்ளேயே தேங்கியிருக்கும். அதன் மூலம் கிருமிகள் உண்டாகித் தொற்றினை ஏற்படுத்துகிறது. தண்ணீர் குடித்து முறையாக சிறுநீர் கழித்து வந்தாலே போதுமானது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை உள்ளேயே அடக்கி வைத்திருக்கக்கூடாது. அதனாலும் கிருமிகள் உண்டாகி தொற்று ஏற்படும்.

வயதான ஆண்களுக்கு விதைப்பையில் தொற்று அல்லது Bladder தளர்ந்து போவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும். எப்போது சிறுநீர் வரும் என்கிற பயத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை இருக்கிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால் கூட சரியாக சிறுநீர் வெளியேறாமல் இருக்கும். அதை கவனத்தில் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

மருந்து மாத்திரைகளால் இத்தொற்றுக்கு ஆளாகுபவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் இருக்கின்றன. ஆக, சிறுநீர்ப்பாதைத் தொற்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல என்பதால் அனைவரும் இதை கவனமாகக் கையாள வேண்டும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...