Doctor Vikatan: என் ரத்தப் பரிசோதனையில் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் கிட்னி செயலிழப்பைத் தடுக்க நான் உணவில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்... பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்.

உங்களின் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக இருக்கும்போது, அது ரிவர்ஸ் செய்யக் கூடியதாகவோ (Reversible) அல்லது ரிவர்ஸ் செய்ய முடியாததாகவோ (Irreversible) இருக்கலாம்.
ஒருவேளை கிரியாட்டினின் அதிகரித்தது ரிவர்ஸ் செய்ய முடியாதது எனப் பரிசோதனையில் தெரிய வந்தால், உங்களுக்கு சி.கே.டி (CKD - Chronic Kidney Disease) எனும் நோய் இருப்பதாகக் கண்டறியப்படும்.
சி.கே.டி என்பது சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் நிரந்தரமான, மெதுவான மற்றும் படிப்படியான இழப்பைக் குறிக்கும். இந்தச் சூழலில், நீங்கள் சில உணவுப்பழக்கக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
அதில் முதலிடம் உப்புக் கட்டுப்பாடு (Salt Restriction). உப்பு என்பது உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகச் செயல்பாட்டை மேலும் மோசமாக்கும்.
சி.கே.டி நோயாளிகள் உணவில் புரதச்சத்தையும் (Protein Restriction) கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இது மேற்கத்திய நாடுகளின் உணவுமுறைக்குத்தான் அதிகம் பொருந்தும். ஏனெனில் அங்குதான் புரதம் சார்ந்த உணவுகள் அதிகம் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது.

நமது இந்திய உணவு முறையில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) தான் பிரதானமானது. சாதம் அல்லது சப்பாத்தியுடன், காய்கறிகள், சிக்கன், மீன் அல்லது முட்டை போன்றவை முதன்மை உணவாக இல்லாமல் சைடிஷாகவே (Side dish) பயன்படுத்தப்படுகின்றன.
நம் உணவில் ஏற்கெனவே புரதம் குறைவாகத்தான் இருக்கிறது என்பதால், புரதத்தை மிக அதிகமாகக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, சி.கே.டி கண்டறியப்பட்ட நோயாளிகள், பருப்பு, பனீர், தயிர் என அனைத்தையும் விட்டுவிடத் தேவையில்லை.
உடலின் எடையில் ஒரு கிலோவிற்கு 1 கிராமுக்கும் குறைவாக புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கெனவே அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மேலும் குறைக்க வேண்டியதில்லை.
கிரியாட்டினின் 1.8 இருக்கும்போது பழங்களை அதிகம் குறைக்க வேண்டியிருக்காது. ஆனால், கிரியாட்டினின் அளவு தொடர்ந்து அதிகரித்தால், உணவில் பொட்டாசியம் சத்தைக் (Potassium Restriction) குறைக்க வேண்டும்.
பழங்கள், நட்ஸ் (Nuts), இளநீர் மற்றும் பழச்சாறுகளில் பொட்டாசியம் அதிகமிருக்கும். ஆரம்பகட்ட பாதிப்பில் ஜூஸ் மற்றும் இளநீரையும், அடுத்தகட்டத்தில் பழங்கள் மற்றும் நட்ஸையும் தவிர்த்தாலே போதுமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment