Doctor Vikatan: தலைக்குக் குளிக்க சீயக்காய்த் தூள்தான் சிறந்தது, காலங்காலமாக அதைத்தான் உபயோகித்து வந்தோம் என ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். சீயக்காய் எல்லாம் வேஸ்ட்... ஷாம்பூதான் பெஸ்ட் என்று சொல்கிறார்கள் இன்னொரு பிரிவினர்.
என்னைப் போல குழப்பத்தில் இருப்பவர்கள், திடீரென சீயக்காய் உபயோகிப்பதும், பிறகு மறுபடி ஷாம்பூ உபயோகிப்பதுமாக மாறுகிறோம். இந்த இரண்டில் எதுதான் சரியானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சீயக்காயா, ஷாம்பூவா என்ற கேள்விக்கு, சருமநல மருத்துவராக, நகரத்துவாசியாக நான் பரிந்துரைப்பது ஷாம்பூவாகத்தான் இருக்கும். தரமான, நன்கு கிளென்ஸ் செய்யக்கூடிய ஷாம்பூதான் சிறந்தது.
தரமான ஷாம்பூ எனும்போது அதில் சேர்க்கப்படுகிற பொருள்கள், அளவு, பிஹெச் அளவு என எல்லாமே சரியாக இருக்கும். அதனால் மண்டைப்பகுதி சுத்தமாக இருக்கும். முடி வறண்டு போகாமல் இருக்கும். பொடுகு வருவது தவிர்க்கப்படும். அதிகப்படியான மாசு, தூசு, அதீத வியர்வை, எண்ணெய்ப்பசை போன்றவற்றை நீக்கவும் உதவும்.
அதே சமயம், சீயக்காய் என்பது மைல்டான க்ளென்சராக வேலை செய்யும். ஆனால், ஒவ்வொருவர் வீட்டிலும் தயாரிக்கும் சீயக்காய்த்தூளின் செய்முறையும் சேர்க்கப்படும் பொருள்களும் அவற்றின் தன்மையும் வேறுபடும். சீயக்காய் என்பது கெமிக்கல் ஏதுமில்லாமல், கூந்தலை இயற்கையாகச் சுத்தம் செய்யும் ஒரு பொருள்.

இப்போதைய சூழலில், வாழ்க்கை முறையில் கூந்தலில் படியும் அழுக்கு, மாசு, பிசுபிசுப்பு போன்றவற்றை எல்லாம் சீயக்காய் முழுமையாகச் சுத்தம் செய்யும் என்று சொல்ல முடியாது.
சீயக்காயில் பிஹெச் அளவும் பேலன்ஸ்டாக இருக்காது. கூந்தலில் வறட்சி அதிகமாக இருக்கலாம். இவை எல்லாம் சீயக்காய் உபயோகிப்பதில் உள்ள பாதக விஷயங்கள்.
சீயக்காய் உபயோகித்துத் தலைக்குக் குளிக்கும்போது, சிலருக்கு அது முழுமையாக அலசப்படாமல், ஒன்றிரண்டு துகள்கள் தலைப்பகுதியிலேயே தங்கிவிடலாம். அதிலிருந்து பொடுகு உருவாகலாம். இந்தக் காரணங்களால்தான் தினசரிப் பயன்பாட்டுக்கு சீயக்காய் குளியல் பரிந்துரைக்கப்படுவதில்லை.
மற்றபடி சீயக்காய் குளியல் தவறு என்று சொல்லவில்லை. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு வைத்திருக்கும்பட்சத்தில் சீயக்காய் குளியல் ஓகே. மற்றபடி, மைல்டானதும் பிஹெச் பேலன்ஸ் சரியாக உள்ளதுமான ஷாம்பூதான் இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஏற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment