Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது.
இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? இதயம் இடது பக்கம் இருப்பதுதான் காரணம், இதயத்துக்கான டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
இதயமானது, கால்களுக்கு மட்டுமன்றி, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீராக வழங்கக்கூடியது. எனவே, இடதுகால் வலிக்கும் இதயத்திற்கும் நேரடியாக உடலமைப்பு ரீதியான (Anatomical) தொடர்பு இல்லை.
ஆனால், அதற்காக இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுக வேண்டியதில்லை. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம்.
தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கால் வலி வரலாம். அதாவது தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகள். குறிப்பாக, சியாட்டிகா (Sciatica) அல்லது டிஸ்க் பல்ஜ் (Disk Bulge) போன்ற எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த (Orthopedic) பிரச்னைகளாலும் வலி ஏற்படலாம்.
சில நேரங்களில் நரம்பு மற்றும் ரத்த நாளப் பிரச்னைகளும் கால் வலிக்குக் காரணமாகலாம். சர்க்கரை நோய் (Diabetes) அல்லது நரம்புகளில் உள்ள வால்வுகளில் ஏற்படும் பிரச்னைகள் (Chronic Venous Insufficiency) காரணமாகவும் வலி உண்டாகலாம்.
எனவே, நீங்கள் முதலில் பொது மருத்துவரை (General Physician) அணுகி, இந்த வலி, ரத்தநாளம் சம்பந்தப்பட்ட பிரச்னையா, நரம்புப் பிரச்னையா அல்லது எலும்பு சார்ந்த பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment