Doctor Vikatan: என் வயது 39. சராசரியைவிட 15 கிலோ எடை அதிகமாக இருந்தேன். அதைக் குறைக்க நினைத்து கடந்த 8 மாதங்களாக கடுமையான டயட்டை ஃபாலோ செய்தேன். அதில் உடல் எடை குறைந்தது. ஆனால், முகம் தொய்வடைந்துவிட்டது. அதனால் நோயாளி போன்றும் வயதானவர் போன்றும் காட்சியளிக்கிறேன். வெயிட்லாஸுக்கு பிறகு தளர்வடைந்த என் முகத்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வைக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
எடை குறையும்போது முதலில் அது முகத்தில்தான் தெரியும். கன்னங்கள் ஒட்டிப்போகும். முகம் மெலிந்து, தொய்வடைந்த மாதிரி காட்சியளிக்கும். மருத்துவர் அல்லது டயட்டீஷியன் ஆலோசனையின் பேரில் டயட்டை பின்பற்றுவோருக்கு இந்தப் பிரச்னை இருக்காது. தாமாகவே ஏதோ ஒரு டயட்டை பின்பற்றும்போதுதான் முகம் தொய்வடையும், சருமம் தளர்ந்து, லூசாகும்.
சிலர் உணவின் அளவை பெரிய அளவில் குறைத்து எடையைக் குறைக்க முயல்வார்கள். இன்னும் சிலர் கார்போஹைட்ரேட்டே வேண்டாம் என அதை முற்றிலும் தவிர்ப்பார்கள். தவறான உணவுப்பழக்கம் தவிர, வேறு சில பழக்கங்களாலும் சராசரியைவிட முன்னதாகவே முதுமைத்தோற்றம் வந்துவிடும். உதாரணத்துக்கு, பெரிய தலையணை வைத்துப் படுப்பது. ஒருக்களித்துப் படுக்கும்போது, கன்னத்தை, தலையணையில் அழுத்திப் படுப்பது போன்றவை.
தினமும் காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், கிரேப்சீட் எண்ணெய் போன்ற ஏதேனும் ஓர் ஆயிலில் சிறிது எடுத்து முகத்தை மசாஜ் செய்யப் பழகுங்கள். முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை தவிர்க்கப்படும். இந்த மசாஜுக்கு பிறகு நீங்கள் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக்கூடிய பேக் ஒன்றையும் உபயோகிக்கலாம்.
அந்த பேக் செய்ய பார்ஸ்லி இலைகள் அடிப்படை. பார்ப்பதற்கு கொத்தமல்லி இலைகளைப் போலக் காட்சியளிக்கும் இதற்கு சருமத்தின் நீர்த்துவத்தைத் தக்கவைக்கும் தன்மை உண்டு. கைப்பிடி அளவு பார்ஸ்லி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு 30 நொடிகள் வைத்திருந்து, அடுப்பை அணைத்து மூடி வையுங்கள். பிறகு அந்தக் கீரையை எடுத்து மிக்சியில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அந்தச் சாற்றில் 3 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார், அதே அளவு கயோலின் பவுடர், 30 மில்லி ஜோஜோபா ஆயில் எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
தலையை உயர்த்திவைத்துப் படுத்துக்கொள்ளுங்கள். கைகளை உபயோகித்து இந்த பேக்கை கழுத்திலிருந்து முகத்தில் மேல்நோக்கித் தடவுங்கள். அது காயும்வரை பேசக்கூடாது. பிறகு கைகளை தண்ணீரில் நனைத்து வட்டவடிவமாகத் துடைத்து எடுத்துவிட்டு, வெறும் தண்ணீரில் கழுவி விடலாம். 3 நாள்களுக்கொரு முறை இதைப் பின்பற்றினாலே நல்ல மாற்றத்தைப் பார்ப்பீர்கள். தளர்ந்த சருமம் டைட் ஆகும். இத்துடன் உங்கள் உணவுப்பழக்கத்தையும் சரி பாருங்கள். முறையான ஆலோசனையோடு டயட்டை பின்பற்றுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment