Skip to main content

புதுப்புது மோசடிகள்... மக்களே உஷார்!

முன்பெல்லாம் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து திருடுவதுதான் வழக்கம். ஆனால், செல்போன், ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்று வந்த பிறகு, நம்மை அறியாமலேயே நம் பாக்கெட்டுக்குள்ளும் வங்கிக் கணக்குக்குள்ளும் இருக்கும் பணத்தைக் கொள்ளை அடிக்கும் வேலைகள் பக்காவாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளில் வலியப்போய் சதிவேலையில் சிக்கி பெரும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்!

அண்மையில் நடந்த பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புனேவில் பன்னாட்டு பொறியியல் நிறுவனத்தின் துணை மேலாளர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியில், ‘‘நாங்கள் அனுப்பும் வீடியோக்களை நீங்கள் ‘லைக்’ செய்தால் போதும், ஒரு ‘லைக்’குக்கு ரூ.50 கிடைக்கும்’’ என்று இருந்துள்ளது. அதை அவர், ‘க்ளிக்’ செய்து ‘லைக்’ செய்ய ஆரம்பிக்க, உடனே அவருக்குப் பணம் வரத் தொடங்கியது. ‘‘மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், இந்த அக்கவுன்டில் பணம் கட்டுங்கள்; உங்களுக்கு இருமடங்காகக் கிடைக்கும்’’ என்று, குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் தகவல் அனுப்ப, இந்தத் துணை மேலாளரும் அவர்களுக்குப் பணம் அனுப்பி இரு மடங்காகப் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், கடைசியாக அவர் அனுப்பிய ரூ.40 லட்சம் பணம் திரும்ப வரவே இல்லை.

இதே போல, சென்னையில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் க்ரைம் போலீஸுக்கு வந்துள்ளன. ‘‘ரூ.100 தந்தால், ரூ.150 உங்களுக்குக் கிடைக்கும்’’ என டெலிகிராம் என்னும் குறுஞ்செய்தித் தளத்தில் ஒரு விளம்பரம் வர, ‘ரூ.100-தானே...’’ என்று சிலர் அனுப்பினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கணக்கில் ரூ.150 வந்தது. அடுத்து ரூ.1,000 அனுப்ப, ரூ.1,500 வந்தது. கடைசியில் ரூ.30 லட்சத்தை அனுப்பிவிட்டு, ரூ.45 லட்சம் திரும்ப வரும் எனக் காத்திருந்தவருக்கு எந்தப் பணமும் வரவில்லை. இப்படி 30 பேர் ரூ.5 கோடி வரை பணத்தை இழந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எழுத்தறிவு இல்லாத ஏழைகள் அல்ல. நன்கு படித்தவர்கள். ரூ.30 லட்சத்தை இழந்தவர் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் இன்ஜினீயர். ரூ.1.2 கோடி இழந்தவர் ஒரு தொழில்முனைவோர்.

அளவுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி குறுஞ்செய்திகளை அனுப்புவதுதான் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையாக இருக்கிறது. ‘வீட்டில் உட்கார்ந்தபடியே பணத்தை அள்ளலாம் போல இருக்கே!’ என்று நினைத்து, இந்த வலையில் வலியச்சென்று விழுந்துவிட்டு, பிற்பாடு ‘பணம் பறிபோச்சே’ என்று புலம்புவதுதான் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. ஒருவர் நமக்கு ஏன் அதிக லாபம் தர வேண்டும், பகுதி நேர வேலையில் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்விகளை எல்லாம் கேட்காமலே, பணத்தைப் போட்டுவிட்டு, பிற்பாடு ‘நான் அப்பாவி, தெரியாமல் பணம் போட்டு விட்டேன்’ என்று புலம்புவதில் என்ன பயன்?

எதுவும் நமக்கு சும்மா கிடைக்காது; அப்படிக் கிடைக்கும் என்று சொன்னால், அது நம்மை ஏமாற்றுவதற்குப் போடும் தூண்டில் என்பதை உணர்ந்து, கவனமாக நடந்துகொண்டால் மட்டுமே இது மாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். பேராசையால் இனியும் பணத்தை இழக்காதீர்கள் மக்களே!

- ஆசிரியர்


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...