Skip to main content

`அம்ரித் உத்யான்’: குடியரசுத் தலைவர் மாளிகையில் பெயர் மாற்றப்பட்ட முகலாய தோட்டத்தின் வரலாறு என்ன?!

பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு ஊர்கள், இடங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டெல்லியிலும், உத்தரப் பிரதேசத்திலும் பெயர் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. டெல்லியில் நேதாஜி சிலை முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு ‘ராஜபாதை’ என்று பெயர். கடந்த 75 ஆண்டுகளாக ராஜபாதை என்று அழைக்கப்பட்டுவந்த அந்த சாலையின் பெயர், சமீபத்தில் ‘கர்த்தவ்ய பாத்’ என்று மாற்றப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தின் பெயரை ‘பிரயக்ராஜ்’ என்று யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியது. அதேபோல, உ.பி-யில் உள்ள முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீன்தயாள் முகேபாத்யாய் என்று மாற்றப்பட்டது. ஃபைசாபாத் பெயரும் மாற்றப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்திருக்கும் பிரமாண்டமான தோட்டம், ‘முகலாய தோட்டம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. தற்போது, ‘அம்ரித் உத்யான்’ என்று அது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்துக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர்சூட்டியிருக்கிறார் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

முகலாய தோட்டம்

இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றியது ஆங்கிலேய அரசு. மிகப்பெரிய கட்டங்களைக் கட்டி, புது டெல்லியை உருவாக்கினார்கள். அங்கு, வைஸ்ராய் மாளிகையை உருவாக்குவதற்கு 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த மாளிகையின் பின்புறத்தில் மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டது. அதுதான் முகலாய தோட்டம்.

முதலில், பிரிட்டிஷ் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் அந்தத் தோட்டத்தை உருவாக்க நினைத்தனர். அப்போது, முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற யோசனையை அன்றைக்கு வைஸ்ராயாக இருந்தவரின் மனைவியான லேடி ஹார்டிங்கே தெரிவித்திருக்கிறார்.

ராஜாஜி

‘முகலாயர்களின் தோட்டங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து பிரமித்துப்போன லேடி ஹார்டிங்கே, லாகூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் முகலாயர் தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். அது ஏற்படுத்திய தாக்கத்தால்தான், முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

1917-ம் ஆண்டிலேயே தோட்டத்துக்கான வரைபடம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், 1928, 1929-ம் ஆண்டில்தான் செடிகள் நடப்பட்டு, தோட்டம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைந்திருக்கும் ரோஜா தோட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தோட்டக்கலைத்துறை இயக்குநராக இருந்த வில்லியம் முஸ்டோ, ரோஜா செடிகளை வளர்ப்பதில் நிபுணர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 வகையான ரோஜா செடி வகைகளைக் கொண்டுவந்து ரோஜா தோட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

அப்துல்கலாம்

அடோரா, மிருணாளினி, தாஜ்மகால், ஈஃபில் டவர், ஒக்லஹாமா, பிளாக் லேடி, புளூ மூன், லேடி எக்ஸ் உள்பட பிரபலமான பல ரோஜா செடி வகைகள் அங்கு இருக்கின்றன. அன்னை தெரசா, ராஜாராம் மோகன்ராய், ஆப்ரஹாம் லிங்கன், ஜவகர்லால் நேரு, ராணி எலிசபெத் உள்பட பல ஆளுமைகளின் பெயர்களும் ரோஜாக்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன. துலிப்ஸ், ஹெலிகோனியா போன்ற மலர்கள் 1998-ல் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

பல்வேறு காலக்கட்டங்களில் குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள், இந்தத் தோட்டம் சிறப்புற தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். டாக்டர் ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, புதிய வகை ரோஜாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முகலாய தோட்டத்தில் அமைந்திருக்கும் ரோஜா தோட்டத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கப்பட்டது.

திரௌபதி முர்மு

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனராலாக ராஜாஜி இருந்தபோது, நாட்டில் உணவுப்பஞ்சம் நிலவியது. அப்போது, முகலாய தோட்டத்தின் ஒரு பகுதியை உணவுதானியங்களைப் பயிரிடுவதற்காக அவர் ஒதுக்கினார். அந்தப் பகுதியில் தானே உழுது, உணவுதானியங்களைப் பயிரிட்டார். அந்தப் பகுதியில் தற்போது பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அந்த காய்கறிகள், குடியரசுத்தலைவர் மாளிகையில் வசிப்பவர்களுக்கு உணவாகின்றன.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கள்ளிச்செடிகள் பிடித்தமானவை. அவரின் காலத்தில், முகலாய தோட்டத்தில் கள்ளித் தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. குடியரசுத்தலைவராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இருந்தபோது, இசைத்தோட்டம், ஆன்மித்தோட்டம் உருவாக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகை வரலாற்றில் ‘முகல் கார்டன்’ என்று பிரபலமாக அறியப்பட்ட அந்தத் தோட்டம் இனிமேல், `அம்ரித் உத்யான்’ என்று அழைக்கப்படும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...