Skip to main content

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan: த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பார்க்க வேண்டாம் என்பது போல டிஸ்கிளெய்மர் போடுவதைப் பார்த்திருக்கிறோம்.

த்ரில்லர் காட்சிகளைப் பார்ப்பதால் ஒருவருக்கு அபார்ஷன் ஆக வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் அபார்ஷன் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, மரபணு தொடர்பான காரணங்கள்... அபார்ஷன் ஆவதற்கு 50 முதல் 70 சதவிகிதம் இந்தக் காரணங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன.

முதல் டிரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் முதல் முப்பருவத்தில் (7 முதல் 8 வாரங்களில்) இதனாலேயே அபார்ஷன் ஏற்படுகிறது.

அடுத்த முக்கிய காரணம், ஹார்மோன் சமநிலையின்மை. உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, சர்க்கரைநோய் இருந்தாலோ, தீவிர பிசிஓஎஸ் பாதிப்புடன் கருத்தரித்திருந்தாலோ... அந்த நிலைகளில் அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்தாலும் கரு கலையலாம்.

அதாவது ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, செப்டம் எனப்படும் சுவர் மாதிரியான பிளவு இருந்தாலோகூட அபார்ஷன் ஆகலாம். பிறவியிலேயே கர்ப்பப்பையில் ஏற்பட்ட கோளாறுகள், 35 வயதுக்கு மேல் கருத்தரித்தல்,  சிலவகை இன்ஃபெக்ஷன், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ் போன்றவற்றாலும் அபார்ஷன் ஆகலாம்.

ஆட்டோஇம்யூன் குறைபாடுகள், சிறுநீரகப் பாதிப்புகள், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்களுடன் தொடர்பில் இருப்பது போன்றவைகூட காரணங்கள் ஆகலாம். ஆனால், த்ரில்லர் படம் பார்த்ததால் மட்டுமே அபார்ஷன் ஆகிவிடாது. 

Abortion (Representational Image)

ஏற்கெனவே கர்ப்பப்பைப் பலவீனமாக இருப்பது, திரெட்டெண்டு அபார்ஷன் (threatened abortion) ஏற்பட்டு ப்ளீடிங் ஆவது என ஏதோ பிரச்னைகள் இருக்கும் நிலையில், திடீரென தீவிர மன அழுத்தம் ஏற்பட்டு ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகம் சுரக்கும்.

அந்நிலையில் த்ரில்லர் காட்சிகளைப் பார்ப்பது ஸ்ட்ரெஸ்ஸைத் தூண்டும் ஒரு காரணியாக இருக்கலாமே தவிர, அதுவே கரு கலைவதற்கான முழுக் காரணமாக இருக்காது.

இதுபோன்ற செய்திகளைப் படித்துவிட்டு, கர்ப்பிணிகள் படங்களே பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. சோகப்படம், த்ரில்லர் படங்கள் எல்லாம் பார்ப்பது, ஆரோக்கியமான கர்ப்பத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

கர்ப்பமாக இருக்கும்போது நல்ல ஓய்வு, தூக்கம், குடும்பத்தாரின் ஆதரவு, பாசிட்டிவ் சிந்தனை போன்றவை இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments