Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எல்லா வீடுகளிலும் யாரோ ஒருவருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம், என்ன சிகிச்சை, தடுப்பு முறை என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

நீங்கள் குறிப்பிடும் பிரச்னையைத்தான் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்று சொல்கிறோம். வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிக்கலாம். இதை 'ஹீட் எக்ஸாஷன்' (heat exhaustion) என்றும் சொல்வோம். வெயிலில் வெளியே செல்கிறார்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை, நிறைய விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் ஹீட் எக்ஸாஷன் என்ற பிரச்னை வரலாம்.
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கினால், அது தீவிரமாகாமல் தடுக்கலாம். நம் வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டிக்கு காய்ச்சல் அதிகமிருந்தாலோ, குழப்பமாக உணர்ந்தாலோ, சம்பந்தமே இல்லாமல் பேசினாலோ, தான் யார், எங்கே இருக்கிறோம் என்பதே தெரியவில்லை என்று சொன்னாலோ, அவையெல்லாம் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளாக இருக்கலாம். சாதாரண தொற்று என நினைத்துக்கொண்டு, வீட்டிலேயே பாராசிட்டமால் கொடுப்பதால் இந்தப் பிரச்னை சரியாகாது. அலட்சியப்படுத்தினால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து வைத்தியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனே அலெர்ட் ஆகி, பெரியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சரியானது.

ஹீட் ஸ்ட்ரோக் பாதித்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். எப்போதும் வரும் காய்ச்சல், சளிதானே... வழக்கமான ஆன்டிபயாட்டிக்கை கொடுத்து ஒன்றிரண்டு நாள்கள் காத்திருந்து பார்ப்போம் என நினைப்பது சரியானதல்ல. மருத்துவமனையில் சேர்த்து, சோடியம், பொட்டாசியம், யூரியா, கிரியாட்டினின் அளவுகளுக்கான டெஸ்ட் செய்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் வெப்பநிலையைக் குளிரவைக்க வேண்டியது மிக முக்கியம். தவிர, ஐவி ஃப்ளூயிட்ஸ் எனப்படும் நரம்புவழி திரவம் செலுத்துவதும் தேவைப்படும். எனவே, வெயில் காலத்தில் சளி, காய்ச்சலா... சாதாரணமாக இருக்கும் என்ற அலட்சியத்தோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment