Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவள் என்பதால் நான் கால்சியம் தேவைக்கு பால் அதிகம் எடுத்துக்கொள்வேன்.
இந்நிலையில் சமீபத்தில் என்னைப் பரிசோதித்த மருத்துவர், பால் அதிகம் எடுப்பதுதான் அனீமியாவுக்குக் காரணம் என்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒரு பக்கம் அனீமியா.. இன்னொரு பக்கம் கால்சியம் தேவை... இரண்டையும் எப்படி சமாளிப்பது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும், பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பால், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். உதாரணத்துக்கு, இன்று பலரும் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் சிரப்பை (Iron Dates Syrup) பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உண்மையில், இந்த காம்போ தவறானது. இரும்புச்சத்தும், கால்சியமும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடியவை அல்ல.
இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்பட வேண்டுமானால், அதை வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, நெல்லிக்காய் அல்லது எலுமிச்சைப்பழச் சாறுடன் இரும்புச்சத்து உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
கால்சியம் தேவைக்குக் கட்டாயம் பால் குடிக்கலாம். ஆனால், அத்துடன் இரும்புச்சத்துள்ள உணவைச் சேர்த்து எடுப்பதைத் தவிர்க்கலாம்.
உதாரணத்துக்கு, கீரை மற்றும் தயிர் சாதம் சாப்பிடுவதாக இருந்தால், கீரை சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தயிர் சாதம் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட உடனேயே தேநீர் (Tea) அல்லது காபி (Coffee) குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்தப் பழக்கமும், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை பெருமளவு தடுக்கும்.
நீங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர் என்றால், இரண்டையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது.
மருத்துவரிடம் கேட்டு அவர் அறிவுறுத்தும் இடைவெளி விட்டு எடுப்பதுதான் பலன் தரும். பசலைக்கீரை போன்ற அனைத்து வகையான கீரைகளிலும், சிறுதானியங்களிலும் (Millets) இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகிய இரண்டுமே இயற்கையாகவே நிறைந்துள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளைத் தனித்தனியாகவோ அல்லது போதிய இடைவெளி விட்டோ எடுத்துக்கொள்வதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment