Doctor Vikatan: என் வயது 34. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய் இருக்கிறது. நீரிழிவு இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சிரமமாகும், குழந்தைப் பேறு பிரச்னையாகும் என்றெல்லாம் சொல்கிறார்களே, எந்த அளவுக்கு உண்மை. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் சஃபி
சர்க்கரை நோய் என்பதை முன்பு வயதானவர்களிடம் பார்த்தோம். தற்போது இளம்வயதினரிடமே பார்க்கிறோம். அதிலும் 20, 25 வயதுள்ள ஆண்களிடமே சர்க்கரை நோய் வருவது சாதாரணமாக மாறிவிட்டது. அதனால் இப்படி ஒரு கேள்வி எழுகிறது என்று நினைக்கிறேன்.
சர்க்கரை நோய் ஒன்றும் தடை செய்யப்பட்ட நோயல்ல. அதனாலேயே திருமணம் செய்யக் கூடாது என்றும் அர்த்தமில்லை.
நீரிழிவு என்பது நாம் கையாளக் கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. டயாபட்டீஸால் திருமணம் செய்துகொள்ளக் கூடிய பெண்ணின் நிலைமை பாதிக்கப்படும் என்றும் மேலோட்டமாகச் சொல்லக் கூடாது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் திருமணம் செய்துகொள்ளலாம்.
நீரிழிவு நோயாளியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்கவும் முடியும். நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல் மோசமாக வளர விட்டால்தான் அதன் பாதிப்புகள் பலவிதங்களிலும் எதிரொலிக்கும்.
மற்றபடி நீரிழிவைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் அவருக்கு மேற்கொண்டு எந்த பாதிப்புகளும் வராமல் தவிர்க்க முடியும். எனவே, இந்த அச்சம் தேவையில்லை.
கட்டுப்பாடில்லாமல் நீரிழிவை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கும், அலட்சியப்படுத்துகிறவர்களுக்கும் அடுத்து வேறு பாதிப்பு வர சாத்தியம் மிக மிக அதிகம். எனவே, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம்.
நீரிழிவு நோயாளிகளிடம் அதிகம் பார்க்கக் கூடிய பிரச்னை Erectile dysfunction என்கிற விறைப்புத்தன்மை கோளாறு. நீரிழிவாளர்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை அதிகமாக இருக்கும். அதிலும் இளவயதில் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் மிக அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கவனிக்கிறோம்.
அந்த வகையில் இதன் அடுத்தநிலையாக குழந்தையின்மை பாதிப்பு (Infertility) உண்டாக்கலாம். அதாவது விறைப்புத்தன்மைக் கோளாறை அலட்சியப்படுத்தினால் மலட்டுத்தன்மை சாத்தியம் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் இதுபோல் உதாசீனப்படுத்தினால் அதற்கென பின்விளைவுகள் வரவே செய்யும்.
நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விறைப்புத்தன்மை கோளாறும் வராது. அதன் அடுத்தகட்டமாக மலட்டுத்தன்மை சாத்தியமும் அதிகரிக்காது. இதன் பின்விளைவுகளும் கூட உடனே நிகழ்வதில்லை.
பல நாள் அலட்சியத்தின் தொடர்ச்சியாகவே நிகழும். நீரீழிவு என்று இல்லை; எந்த நோயாக இருந்தாலும் அதை சரியாகக் கண்டறிந்து, சரியான மருத்துவரின் வழிகாட்டுதலுடன் இருந்தால், அந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், முறையாக அந்த நோயின் பாதிப்பைக் குறைப்பதாக இருந்தால், நோய் மேலும் மோசமாகாமல் இருந்தால், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொண்டால், பல பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment