இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பிரச்னையாகவும் சவாலாகவும் இருப்பது போதைப்பழக்கம்தான்.
'இது போதை' என்று தெரிந்தே சிக்குபவர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் 'இவையெல்லாமும்கூட போதை தான்' என்று தெரியாமலேயே சிக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவை இரண்டு குறித்தும் விரிவாகப் பேசுகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சுபாராமன்.
"போதைப் பழக்கத்திற்கு நம் மூளைதான் முக்கியமான காரணம். நம் மூளையில் இருக்கக்கூடிய வெகுமதி மையத்திற்கு (reward Center) இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது.
நம் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து இயங்குவதற்கு ஹார்மோன்கள் உதவுகின்றன. அதில் டோபமைன் (dopamine) என்று சொல்லக்கூடிய ஹார்மோன், மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
நம்மை மற்றவர்கள் பாராட்டும்போது, அதிக மதிப்பெண் எடுக்கும்போது, உயர் பதவி, ஊதிய உயர்வு என்று தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல பாசிட்டிவ் நிகழ்வுகளின்போது டோபமைன் சுரக்கும். அதாவது, ஒரு செயல் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் இந்நிகழ்வு நடக்கும்.
இதே மகிழ்ச்சி, போதைப்பொருள்கள் பயன்படுத்தியதும், நினைத்தே பார்க்காத அளவில் கிடைப்பதால் திரும்ப திரும்ப போதைப்பொருட்களை பயன்படுத்த மூளை கட்டளையிடுகிறது.
கூடவே, போதைப்பொருட்களை பயன்படுத்துவதை மட்டுமே முழு நேர செயல்பாடாக மாற்றவும் மூளை ஏங்குகிறது.
'இதுகூட போதைப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்' என்கிற விழிப்புணர்வு இல்லாமல், நிறைய பழக்கங்கள் மாணவர்களிடையே காணப்படுகிறது.
பஞ்சர் டியூப் கரைசல், பெயின்ட் தின்னர், வெண்மையாக்கி (whitener), நெயில் பாலீஷ், இருமல் மருந்து, மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகள் என்று நம் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது அடிக்கடியோ பயன்படுத்தும் பொருட்களைக்கூட இளம் பருவத்தினர் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'பெட்ரோலை பாலித்தீன் கவரில் ஊற்றி அதனை முகர்ந்து பார்க்கும் பழக்கம் இருப்பதாகவும், அதிலிருந்து மீள' உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.
மது, புகை மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மட்டும்தான் போதைப்பழக்கம் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். நான் மேலே சொன்னவையும் போதைப்பழக்கமே.
தவிர, இணைய தள விளையாட்டு, ஆபாச வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடுதல், கட்டுப்பாடின்றி தொடர்ந்து பொருள்களை வாங்கிக் குவிப்பது போன்ற செயல்வழி சார்ந்த அடிமைத்தனத்தாலும் (process addiction) பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
சமீபகாலமாக போதைப்பழக்கம் அதிகரித்திருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் என்பேன். சினிமாவே சிகரெட் பிடிப்பதையும், மதுப்பழக்கத்தையும் நார்மலைஸ் செய்தது.
தற்போது கஞ்சா புகைப்பது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை நடிகர்கள் பயன்படுத்துவது அதனை ஊக்குவிப்பது போல உள்ளது. ஒவ்வொரு நடிகரும், இயக்குநரும் தங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசர அவசியம்.
தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களான படிப்பு அல்லது வேலையில் விருப்பமின்மை, பணியிடத்தில் அடிக்கடி சண்டை அல்லது லீவு போடுதல், தன்னுடைய அன்றாட செயல்களில் போதைக்கு முன்னுரிமை அளிப்பது, திருடுவது, பொய் சொல்லுவது போன்ற செயல்பாடுகள் போதைப்பழக்க அடிமைத்தனத்தை காட்டும்.
* ஒருவர் போதைப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமானால் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
* போதைப்பழக்கத்திலிருந்து மீள நினைத்தால், முதலாவது இதனால் வரக்கூடிய உடல், மனம், குடும்பம், சமூகம் மற்றும் சட்டரீதியான பிரச்னைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
* இரண்டாவது, சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலான போதைப்பழக்கம் சூழல் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
குறிப்பாக நண்பர்களின் அழுத்தத்தினால் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகின்றனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் கவனம் செலுத்துவது நல்லது. இவர்களின் சூழலை மாற்றினால் நல்ல மாற்றம் தெரியும்.
* இறுதியாக நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைத்து, நண்பர்களின் அழுத்தத்தைத் தவிர்த்து, நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்த முயற்சி செய்யலாம்.
உதாரணமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது, நூலகம் செல்வது, தனித்திறன்களை வளர்ப்பதில் ஈடுபடுவது, உயர்வான குறிக்கோள்களை தன் மனதில் விதைத்து அதை நோக்கிச் செல்வது, ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பது போதைப் பழக்கத்திலிருந்து மீள வழிவகைக்கும்.
தவிர, மருத்துவரின் உதவியும் தேவைப்படும். உளவியல் ஆலோசகரின் தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனையும் நிச்சயம் தேவைப்படும். உளவியல் ஆலோசனை, குடும்ப ஒத்துழைப்பு, நல்லவிதமான சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் போதை பாதையிலிருந்து நிச்சயம் விலகலாம்'' என்று நம்பிக்கைக் கொடுக்கிறார் உளவியல் நிபுணர் சுபாராமன்.
Comments
Post a Comment