Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும் தவறானது. அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும். தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும். அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது ச...