Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம் சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும் கொடுக்கலாமா, குழந்தைகளுக்கு பழைய சாதம் கொடுத்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன். ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்போது வாட்டிவதைக்கும் வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை அது காக்கும். பழைய சாதம் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறத...