Doctor Vikatan: சமீப காலமாக நடைபாதைகளில் தேங்காய்ப்பால் விற்பனை செய்வது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இனிப்பு சேர்த்தது, சேர்க்காதது என விதவிதமாக தேங்காய்ப்பால் விற்கிறார்கள். தேங்காய்ப்பால் எல்லோரும் குடிக்கலாமா... அதில் கொழுப்பு, சர்க்கரை கிடையாதா? யார் தவிர்க்க வேண்டும்... தினமும் குடிப்பது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்
தேங்காய்ப்பால் உடலுக்கு மிகவும் நல்லதுதான். இதில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு (Medium-Chain Triglycerides) உள்ளது. ஆனால், அது நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids) வகையைச் சேர்ந்தது என்பதால், இது உடலில் கொழுப்பை (Cholesterol) அதிகரிக்கக்கூடும். அதாவது தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு என்ற பிரிவில் இருந்தாலும், அதன் சிறிய அளவின் காரணமாக அது மற்ற கொழுப்புகளைப் போல ரத்தத்தில் தங்கி கொழுப்பை அவ்வளவு எளிதில் அதிகரிப்பதில்லை. இது உடலில் சேமிக்கப்படாமல் உடனே செலவழிக்கப்பட்டுவிடும். இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் எதிலுமே பாதிப்பு உண்டு என்பதால், தேங்காய்ப்பாலை மிதமான அளவில் சேர்த்துக்கொள்வதுதான் இதயத்திற்குப் பாதுகாப்பு.
தேங்காய்ப்பாலை தினமும் எடுப்பதெல்லாம் சரியானதல்ல. அப்படி எடுத்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் இலக்கு நிறைவேறாது. நிறைய பேருக்கு இன்று லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை (Lactose Intolerance) எனப்படும் பால் அலர்ஜி இருப்பதைப் பார்க்கிறோம். பால் மற்றும் பால் பொருள்கள் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, தேங்காய்ப்பால் சிறந்த மாற்றாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. தேங்காய்ப்பாலில் லாக்டோஸ் கிடையாது என்பதுதான் காரணம். மற்ற எல்லா பால் வகைகளிலும் உள்ள உடலுக்குத் தேவையான மக்னீசியம் (Magnesium), இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் சி (Vitamin C) ஆகிய சத்துகள் தேங்காய்ப்பாலிலும் நிறைந்துள்ளன
குடல் புண், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாகச் செயல்படும். அதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு (Anti-inflammatory), உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு துண்டு தேங்காயை அரைத்து பால் எடுத்து, வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள ஸ்மால் செயின் ஃபேட்டி அமிலங்கள் (Small Chain Fatty Acids) வயிற்றுப் புண்களை ஆற்ற உதவும். மற்றபடி ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட தேங்காய்ப்பாலை தினமும் எடுத்துகொள்வது தவறானது. இதில் அதிக அளவிலான கலோரிகள் உள்ளன. அதனால் உடல் எடை அதிகரிக்கும்.
தினமும் வெறும் தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்வதே தவறானது என்று சொல்லப்படும்போது, அதில் இனிப்பு சேர்த்துக் குடிப்பதெல்லாம் ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும் என்பதால் தவிர்ப்பதுதான் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment