Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீர் இறப்புகள் நிகழ்வது எப்படி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-06/56ad2554-9a46-4fa1-9ce0-04ab8e9401dc/WhatsApp%20Image%202024-06-13%20at%205.46.26%20PM.jpeg)
இந்த விஷயத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் பலரையும் ஆரோக்கியமானவர் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் சாதாரண ரத்தப் பரிசோதனை தொடங்கி எந்த மெடிக்கல் செக்கப்பையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு - இந்த மூன்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்பட மிக மிக முக்கியமான காரணிகள். இந்தப் பிரச்னைகள் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. உதாரணத்துக்கு, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 159 என்ற அளவில் இருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவு 250 என்று இருந்தாலோ, ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். கொலஸ்ட்ரால் அளவு உச்சத்துக்குப் போகும்வரைகூட அறிகுறிகள் இருக்காது. அதை டெஸ்ட் செய்து பார்த்தால் மட்டுமே தெரியும்.
எனவே, அறிகுறிகள்தான் இல்லையே... அப்படியானால் நான் ஆரோக்கியமாக இருப்பதாகத்தானே அர்த்தம் என்ற எண்ணத்தில் பலரும் பல பிரச்னைகளுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளித் தோற்றத்துக்கும் இவர்கள் நன்றாக இருப்பதால் மற்றவர்களும் அந்த நபர் ஆரோக்கியமாக இருப்பதாகவே நினைத்துக்கொள்வார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/28sazj7r/man-good-physical-shape-doing-push-ups-global-pandemic482257-20842.jpg)
இவர்களில் சிலர், திடீர் ஞானோதயம் வந்தவர்களாக, எடையைக் குறைக்கிறேன், ஃபிட் ஆகிறேன் என்ற எண்ணத்தில், திடீரென உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். அதையும் மெள்ள மெள்ள செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே தீவிரமாகச் செய்வார்கள். அந்நிலையில், இதயத்துக்கு அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் போகலாம். எனவேதான் எப்போதும் உடற்பயிற்சியைத் தொடங்குவோர், மெதுவாக, மெள்ள மெள்ள செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதயநலனைத் தெரிந்துகொள்ள இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் போதும் என்பது பலரின் எண்ணம். இசிஜி என்பது இதயத்தின் தற்போதைய நிலையை சட்டென காட்டுவது போன்றது. ஆனால், ஒவ்வொரு செய்கையின் போதும் இதயம் எப்படி ரியாக்ட் ஆகிறது என்பது முக்கியம். ஸ்ட்ரெஸ்ஸும் பதற்றமும்கூட இதயத்துக்கு அழுத்தமாக மாறலாம். அப்படிப்பட்ட நிலையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கும், அதன் சுருங்கி விரியும் திறனும் அதிகரிக்கும்.
இதுபோன்ற தருணங்களில் இதயம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்வோம். உடற்பயிற்சி செய்யும்போது இசிஜி மற்றும் எக்கோ இரண்டும் எப்படிக் காட்டுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த டிரெட்மில் டெஸ்ட்டையும் நம்மில் பலரும் செய்து பார்ப்பதில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/lwc5rnqd/medical-researcher-using-laptop-while-measuring-sportsman-endurance-using-body-sensors-electrodes-mask-measuring-cardiac-rhythm482257-2070.avif)
நம்மூரைப் பொறுத்தவரை நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பார்ப்பதற்கு ஒல்லியாகவே இருப்பார்கள். தொப்பை மட்டும் இருக்கும். இவர்களுக்கு உடலின் உள் உறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு படிந்திருக்கும். அதைவைத்து, பார்ப்பதற்கும் ஒல்லியாகத்தானே இருக்கிறோம், ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம் என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், டெஸ்ட் செய்து பார்த்தால் பிரச்னைகள் இருப்பது தெரியவரும்.
சிலர் டயட், உடற்பயிற்சி, மருத்துவ செக்கப் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார்கள். ஆனால், அதீத வேலை காரணமாக உடலை வருத்திக் கொள்வார்கள். சரியாகத் தூங்க மாட்டார்கள். அது அவர்களுக்கு உடலளவில், மனத்தளவில் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும். புகை அல்லது மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவை எல்லாமும் கவனிக்கப்பட வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஓய்வு, ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது போன்றவையும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment