சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் உருவாகும் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது.
கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இதற்கும் அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், HMPV வைரஸ் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை என இந்திய பொதுச் சுகாதார இயக்குநரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுச் சுகாதார இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல், "சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது என்று செய்திகள் வந்துள்ளன. நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இது சுவாச வைரஸ் போன்றது.
இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கும் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகள் பொதுவானவை. அவற்றைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. மருந்துகள் தேவையில்லை. ஏனெனில் இதற்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை. சீனாவில் பரவும் HMPV வைரஸ் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை. இது சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்தான். இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படவில்லை" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
விகடன் ஆடியோ புத்தகங்கள்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/PorattangalinKathai
Comments
Post a Comment