வேலை வேலை என பெரும்பாலோனோர் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில், `நீங்க நகரவே வேண்டாம் ஆர்டர் பண்ண அடுத்த 10, 20 நிமிடங்களில் உங்க இடத்துக்கே பிரியாணி டு பீட்சா வரைக்கும் எல்லா வகையான சாப்பாடு, கூல்ட்ரிங்க்ஸும் கொண்டு வரோம்' என்று ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் வந்துவிட்டது.
இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ்பாண்டே, உடலுக்கு ஆரோக்கியமற்ற இந்த உணவு முறை குறித்து Swiggy, Zomato, Zepto போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.
இது குறித்து, லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் சாந்தனு தேஷ்பாண்டே, `` `சமைக்கின்ற நேரம் 2 நிமிடம், டெலிவரி நேரம் 8 நிமிடம்'. இதை, `qcom for food' நிறுவனர் என்னிடம் கூறினார். ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட மற்றும் பாமாயில், சர்க்கரை அதிகமாக உள்ள தீவிர பதப்படுத்தப்பட்ட உணவால் மோசமான ஊட்டச்சத்து என்ற மிகப்பெரிய தொற்றுநோயால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக விவசாய விளைச்சலுக்கு முன்னுரிமை அளித்ததால், நமது தானியங்கள் ஊட்டச்சத்து இழந்திருக்கின்றன. ரூ. 49 பீட்சா, ரூ. 20 நச்சு எனர்ஜி ட்ரிங்க்ஸ், ரூ, 30 பர்கர் ஆகியவையால் ஜங்க் ஃபுட் அடிக்சன் தூண்டப்படுகிறது.
இது, ஆரோக்கியத்துக்குத் தேவையான பொருளாதார பாதுகாப்பு இல்லாமல் சீனா, அமெரிக்காவின் பாதையில் நம்மைக் கொண்டுசெல்கிறது. குளிரூட்டப்பட்ட உணவு, கிரேவி, பழைய காய்கறிகள் ஆகியவற்றைச் சூடாக்கி, புதியது போன்ற தோற்றத்தை அளிக்கும் உணவுடன், இருசக்கர வாகனத்தில் ஒருவர் 10 நிமிடத்தில் உங்கள் வீட்டு வாசல் முன் வந்து நிற்பார். காரணம் சமைப்பதற்கு உங்களின் சோம்பேறித்தனம்.
இதை இந்திய வர்த்தகத்தின் அடுத்த பெரிய அலையாக மாற்றுவதற்கு, அனைத்து முதலீட்டாளர்களும், நிறுவனர்களும் கவர்ச்சிகரமான வார்த்தைகளை ஏற்கனவே கண்டுபிடிக்கின்றனர். Zomato, Swiggy, Zepto தயவுசெய்து நீங்கள் இதைச் செய்யாதீர்கள். ஒருவேளை அதில் நீங்கள் தீவிரமாக இருந்தால், உங்களின் தயாரிப்புகளைச் சுவையானதாக மாற்றுங்கள்.
ஒருவேளை 10 நிமிடங்களில் பழையதல்லாத, ஓரளவுக்குத் தரமான உணவுகளைக் கொடுக்க முடிந்தால் அதை விரும்புகிறேன். கட்டுப்பாட்டாளர் தயவுசெய்து இதனைக் கண்காணிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, தயவுசெய்து அனைவரும் சமைக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு யாரும் பிஸியாக இல்லை. இது கட்டுப்பாடில்லாமல் சென்றால் பெரும் சுகாதார பிரச்னைகளை விளைவிக்கலாம்." என்று எச்சரிக்கையோடு குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Comments
Post a Comment