முக்கனியில் ஒன்றான வாழையில் எண்ணிலடங்காத சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மை. ஆனால், இந்த வாழைப்பழம் எவ்வாறு நமது செரிமானத்திற்கு உதவுகிறது, யாரெல்லாம் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம், யாரெல்லாம் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்
வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
எந்த உணவுப்பொருளையும் அளவுடன் எடுத்துக்கொண்டால் அவை நமது உடலுக்கு அருமருந்தாகவே செயல்படும். அளவிற்கு மிஞ்சினால் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். வாழைப்பழம் ஒரு நாளிற்கு ஒன்று எடுத்துக்கொண்டால் நமது உடலுக்கு தேவைப்படும் பொட்டாசியம் சத்து பூர்த்தியாகும். கூடுதலாக குடல் சார்ந்த பிரச்னைகளையும் சரி செய்ய உதவும். இதுவே, நான்கைந்து வாழைப்பழங்களை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
100 கிராம் வாழைப்பழத்தில் 79 கலோரி எனர்ஜியும், ஜீரோ கிராம் கொலஸ்ட்ராலும், 0.3 கிராம் கொழுப்புச்சத்தும், ஒரு மில்லி கிராம் சோடியமும், 358 மில்லிகிராம் பொட்டாசியமும் அத்துடன் நமது உடலிற்கு மிகவும் தேவைப்படும் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளது.
எந்த நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?
வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள சத்து, பொட்டாசியம். பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள் வாழைப்பழத்தை அவர்களது உணவில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள், ஒரு வேளை உணவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், உடலில் போதுமான பொட்டாசியம் சேர்ந்து, இதயம் சீராக செயல்பட உதவும்.
யார் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது?
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய வால்வில் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழம் எவ்வாறு மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது?
பொதுவாக மலச்சிக்கல் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் நார்ச்சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு வாழைப்பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதனால், நாளொன்றுக்கு ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் வராது, இருந்தாலும் சரியாகும். இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டால் அவை மலச்சிக்கலை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், வாழைப்பழத்தில் பெக்டின் (pectin) என்கிற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. இது உடலில் அதிகரித்தால் செரிமானம் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?
பெரும்பாலான பழங்களை நாம் ஃப்ரிட்ஜில் வைத்தே சாப்பிடுகிறோம். ஆனால், வாழைப்பழத்தை நாம் அப்படி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஃப்ரிட்ஜில் வைத்து வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள மாவுச்சத்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) ஆக மாறிவிடுகிறது. அதனை நாம் சாப்பிடும் போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.
பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்களை வாழைப்பழம் குறைவாக எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்போம். ஏனெனில், அவர்கள் குறைவான அளவு குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீரிழிவு இருப்பவர்கள், ஏலக்கி போன்ற சிறிய வகை வாழைப்பழங்களை மருத்துவரின் ஆலோசனைப் பெற்று எடுத்துக்கொள்வது நல்லது.
பாலுடன் சேர்த்து வாழைப்பழம் சாப்பிடலாமா?
பொதுவாகவே பாலுடன் சேர்த்து எந்தப் பழத்தை உட்கொண்டாலும், அது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். வாழைப்பழத்தை நாம் பாலுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதே தவிர்ப்பதே நல்லது.
வாழைப்பழத்தை காலை, மாலை, அல்லது இரவு என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால், அந்த நாளிற்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுத்து உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
Comments
Post a Comment