Doctor Vikatan: 'உங்களுக்கு நெஞ்சுவலி உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா, ஆஞ்சியோபிளாஸ்டியோ, அறுவை சிகிச்சையோ செய்து கொள்ள பயமா... தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஈஈசிபி (EECP ) சிகிச்சையைச் செய்து கொள்ள எங்களை அணுகுங்கள்... வலியிருக்காது, மருத்துவமனையில் தங்க வேண்டாம், அறுவை சிகிச்சை தேவையில்லை... இந்தச் சிகிச்சை வெயிட்லாஸுக்கும் உதவும்...'' இப்படியொரு விளம்பர நோட்டீஸ் சமீபத்தில் என் கண்களில் பட்டது. அதென்ன ஈஈசிபி சிகிச்சை... இது உண்மையிலேயே இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா.... யாருக்குச் செய்யப்படுகிறது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
'என்ஹான்ஸ்டு எக்ஸ்டெர்னல் கவுன்ட்டர் பல்சேஷன்' (Enhanced External Counter Pulsation) என்ற தெரபியின் சுருக்கமே ஈஈசிபி (EECP) என்று சொல்லப்படுகிறது. இதயநோயாளிகளில் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் செய்யப்படுகிற சிகிச்சை இது. இந்தச் சிகிச்சைக்கு குறிப்பிட்ட சான்றுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆஞ்சியோ பிளாஸ்டியோ, பைபாஸ் அறுவை சிகிச்சையோ செய்ய முடியாத நிலையில், ஈஈசிபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இது முற்றிலும் நிரூபிக்கப்பட்ட, பலன்தரக்கூடிய அற்புதமான சிகிச்சை என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சிலருக்கு இது பலன் தரலாம் என்றே சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில், இதயத்தில் ஏற்படும் எப்படிப்பட்ட ரத்தக்குழாய் அடைப்பையும் சரிசெய்ய ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியும்.
இது தவிர, கோவிட் பாதிப்புக்குப் பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டோருக்கும் இந்தச் சிகிச்சை உதவும் என்று சொல்லப்படுகிறது. ஈஈசிபி தொடர்பாகச் செய்யப்பட்ட பல ஆய்வுகளும் முழுமையாகவோ, முறையாகவோ செய்யப்படவில்லை. வெயிட்லாஸ் செய்வதற்கு அடிப்படை கலோரி கட்டுப்பாடு.
இதுபோன்ற தவறான விளம்பரங்களைப் பார்க்கும் பலரும், எடையைக் குறைக்க, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற விஷயங்களை மறந்துவிட்டு, ஈஈசிபி செய்தால் போதும் என்ற முடிவுக்கு வரும் ஆபத்து இருக்கிறது.
ஈஈசிபி சிகிச்சை என்பது ஸ்டென்ட் பொருத்துவதற்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ மாற்று கிடையாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உறுதியளிக்கும் விளம்பரங்களை தயவுசெய்து நம்ப வேண்டாம். முறையான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும்தான் உங்கள் உயிரைக் காக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment