வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, வறட்சி, அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். மோர், இளநீர், பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றை பருகச்சொல்லி முன்னோர்கள் தொடங்கி, மருத்துவர்கள் வரை பலரும் அறிவுரை வழங்குவார்கள்.இவையெல்லாம் உடலை குளிர்ச்சி அடையச்செய்யும். சம்மரில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது போல், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்...நோய் தாக்கம் ஏற்படாமல் சம்மரிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ரேச்சல் தீப்தி...
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-10/4fcf5d24-8ed8-4760-a7d0-ece541258973/WhatsApp_Image_2021_10_20_at_12_59_39_PM.jpeg)
கோடைக்காலத்தில் அடிக்கடி நாவறட்சி ஏற்படும். தாகத்தைத் தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிப் பருகுவார்கள்... ஆனால், இது போன்று கார்பனேட்டடு குளிர்பானங்கள் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீர்மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள், பதநீர், போன்றவை பருகலாம். எந்த பானம் பருகுவதாக இருந்தாலும், ஐஸ்கட்டிகளை தவிர்த்துவிடுங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/3d128d3d-9cf8-4979-9662-64511796f456/1_c.jpg)
டிரை ஃப்ரூட்ஸ் இப்போது எல்லோரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது. பழங்களை ஒப்பிடும் போது, உலர் பழங்களில் நீர்ச்சத்து குறைவு என்பதால் ஃப்ரெஷ் பழங்களை வாங்கி உண்பது கூடுதல் ஆரோக்கியம் சேர்க்கும்
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் நிச்சயம் செரிமான பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். எளிதில் செரிக்கும்.
மாம்பழம், பலா, போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், இவை உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மமுலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலிருக்கும் புரதச் சத்துகள் நீங்கிவிடும். உடலுக்கு முழுமையான சத்து கிடைக்காது. மேலும், எண்ணெய் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அசைவ உணவுகளை குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது.
முழுமையாக வேக வைக்காத உணவுகள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவும். அதே போல் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளறுகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/4c43edee-b417-491f-909d-a68b8f847fa1/1f.jpg)
அதிக காரமான உணவுகள், ஊறுகாய், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான டீ, காபி பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வெள்ளரி, பூசணி, போன்று நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரை பருகலாம். சரியான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் உடலின் தன்மை , உடல் சூட்டின் அளவு வேறுபடும் என்பதால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
Comments
Post a Comment