Doctor Vikatan: என் வயது 49. கடந்த சில மாதங்களாக மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மிக அதிகமாக இருக்கிறது. மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டபோது எண்டோமெட்ரியம் என்ற பகுதியின் அடர்த்தி அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அதற்குத் தீர்வாக கர்ப்பப்பையை அகற்றுவது குறித்துச் சொன்னார். என்னுடைய இந்தப் பிரச்னைக்கு கர்ப்பப்பை நீக்கம்தான் தீர்வா...? கர்ப்பப்பையை நீக்கிய பெண்களுக்கு அதற்குப் பிறகு நார்மல் வாழ்க்கை சாத்தியமில்லை என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை 'ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் (Hysteroscopic Endometrial Ablation) முறையில் சுரண்டி எடுத்துவிடலாம்.
அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கை சாத்தியமில்லை என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அறுவைசிகிச்சை முடிந்தபிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது 3 மாதங்கள்வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்திய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல, அது மனது சம்பந்தப்பட்டது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.

கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment