வாய் சுகாதாரத்தை பற்றி பேசும்போது நாக்கை சுத்தமாக வைத்துக்கொள்வதை பற்றியும் பேச வேண்டும். நாக்கை சுத்தப்படுத்துவதன் அவசியம், நாக்கில் வெள்ளைாகப் படிவதற்கான காரணங்கள், தீர்வுகள் என நாக்கு ஆரோக்கியத்தை பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி:

நாக்கில் வெள்ளையாகப் படிவதற்கு முதன்மையான காரணம் சுகாதாரமில்லாமல் இருப்பது. நாக்கின் மேல்புறத்தில் சிறிய சிறிய இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் சுவையை நமக்குத் தெரிவிக்கும்.
வாய்ப்பகுதி சுத்தமில்லாமல் இருப்பது, நோய்த்தொற்று, நாக்கில் அழுக்குப் படிவது போன்ற காரணங்களால் அந்த இழை போன்ற அரும்புகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனை 'ஹைப்பர்டிராபி' (Hypertrophy) என்பார்கள். இவை அதிகமாக வளர்வதால் என்ன சாப்பிட்டாலும் நாக்கில் சென்று படியத் தொடங்கும். சிலருக்கு நாக்கின் சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். அது பார்ப்பதற்கு வரைபடம் (Map) போல இருக்கும். இதனை 'ஜியோகிராஃபிக் டங்' (Geographic Tongue) என்பார்கள். வைட்டமின் பி குறைபாட்டினால் இது ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, நிறைய மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, அறுவை சிகிச்சை செய்திருக்கும்போது உள்ளிட்ட காரணங்களால் வாயில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு நாக்கில் வெள்ளையாகப் படியும். பால்வினை நோய்களால் ஹெச்.ஐ.வி, சிஃபிலிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாக்கில் வெள்ளையாகப் படிய வாய்ப்புள்ளது.
நீண்ட நாள் வெள்ளையாகப் படிந்திருப்பது புற்றுநோயாகவோ வேறு பிரச்னையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். நீங்கள் பிரஷ் செய்து நாக்கை சுத்தப்படுத்திய பிறகும் நாக்கில் வெள்ளையாகப் படிந்திருப்பது அகலவில்லை என்றாலோ, நாக்கை சுத்தப்படுத்தும்போது ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும். பிரஷ் செய்து, நாக்கை சுத்தப்படுத்திய பிறகு படிந்திருப்பது அகன்றுவிட்டால், முறையாக பிரஷ் செய்து வாய் சுகாதாரத்தைப் பேணினாலே போதுமானது. என்ன பிரச்னையால் நாக்கில் வெள்ளையாகப் படிகிறது என்பதைக் கண்டறிந்து, தீர்வு கண்டுவிட்டாலே நாக்கில் வெள்ளையாகப் படியாது.

Tongue Cleaner
உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும் டங் க்ளீனரை (Tongue Cleaner) தொடர்ந்து நாக்கின் மீது பயன்படுத்தும்போது சுவை அரும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவை மொத்தமாக அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது. அவை அளவுக்கு அதிகமாக வளரும்போது என்ன சாப்பிட்டாலும் நாக்கில் அழுக்கு போல படியும்.
மவுத் வாஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடாது. மவுத்வாஷில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும். அதிகபட்சம் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாள்கள் பயன்படுத்தலாம். தினமும் இரண்டு, மூன்று முறை பயன்படுத்துவது வறட்சியை ஏற்படுத்தும். அதிக மவுத் வாஷ் பயன்பாடு வாயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்கும்போது பல் மருத்துவர் மவுத் வாஷ் பயன்படுத்த அறிவுறுத்தினால் மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த மவுத் வாஷை எப்படி, தண்ணீருடன் எந்த விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் பின்பற்ற வேண்டும்.
பிரஷ் செய்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, வெளியே சென்றுவிட்டு வரும்போது என அடிக்கடி மவுத் வாஷ் பயன்படுத்துவதே வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மருந்துக்கடைகளில் விற்பனை செய்வதை நாமாக வாங்கிப் பயன்படுத்தக்கூடாது.
மவுத் ஃபிரெஷ்னர் ஸ்பிரே, மவுத் ஃபிரெஷ்னர் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படும் பாக்கு வகைகள் போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. இவையெல்லாம் பாதுகாப்பானவை என்பதற்கான எந்த மருத்துவ நிரூபணமும் செய்யப்படவில்லை. இதுபோன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வாயின் மேல்புறத்தில் புண் (அல்சர்) வந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.
நாக்கை எப்படி சுத்தப்படுத்துவது?
நாள் முழுவதும் சாப்பிடும் உணவு அனைத்தும் நாக்கிலும் படியும். அதனால் பற்களை சுத்தப்படுத்துவது போல நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். பிரஷ் செய்துவிட்டு நாக்கை சுத்தப்படுத்தவில்லை என்றால் வாயிலிருக்கும் துர்நாற்றம் போகாது. இது தெரியாமல் பலர் வெறும் பிரஷ் மட்டும் செய்வார்கள். ஆனால் எப்போதெல்லாம் பிரஷ் செய்கிறோமோ அப்போதெல்லாம் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
நாம் பயன்படுத்தும் பிரஷ்ஷின் முனைகளில் இருக்கும் இழைகளை வைத்தே நாக்கை சுத்தப்படுத்தலாம். சில பிரஷ்ஷின் பின்புறத்தில் நாக்கை சுத்தப்படுத்துவதற்கு ரப்பரினால் ஆன அமைப்பு இருக்கும். அதையும் நாக்கை சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். குறிப்பாக, காலை, இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் பிரஷ் செய்யும் நாக்கையும் சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும். சாப்பிட்டதற்குப் பிறகு விரல் வைத்து நாக்கை சுத்தப்படுத்துவதும் நல்லது" என்றார்.

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.
Comments
Post a Comment