`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. அதற்கேற்ப நம்மை நாம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சரிவர பார்த்துக்கொள்வது, நம் முக்கிய கடமைகளில் ஒன்று. நாளுக்கு நாள் புதிதுபுதிதாக நோய்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. அவற்றில் பல நோய்கள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.
உதாரணத்துக்கு, `லூபஸ்' என்று சொல்லப்படும் எஸ்எல்ஈ (சிஸ்டமிக் லூபஸ் எரிதமடோசஸ்). இது நம் உடலின் தலை முதல் கால் வரை எந்த உறுப்பை வேண்டுமானாலும் பாதிக்கும் தன்மை கொண்டது.
இந்த நோயில், நம் உடலின் எதிர்ப்பு சக்தியே நம் திசுக்களை சேதப்படுத்தி, வீக்கம், உடல் உறுப்பு சேதம், உயிர் ஆபத்து போன்ற பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்திவிடும். இதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே, வருடந்தோறும் மே 10-ம் தேதி 'சர்வதேச லூபஸ் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
லூபஸ் நோய் குறித்த பல தகவல்களை விளக்குகிறார் , சென்னை காவேரி மருத்துவமனையின் வாத நோய் நிபுணர் (rheumatologist) டாக்டர் ஷாம்.
லூபஸ்... காரணங்களும், அறிகுறிகளும்
ஆய்வின் அடிப்படையில், ஆண்களை விடவும், இளம் வயது பெண்களே இந்த “லூபஸ்” நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். இதற்கு மரபியல் முக்கிய காரணமாக இருந்தாலும், அதிக நேரம் சூரிய ஒளியில் இருத்தல், ஹார்மோன் மாற்றங்கள், தொற்றுநோய்கள் போன்ற புற விஷயங்களும் நமக்குள் இருக்கும் நோயைத் தூண்டிவிடும் காரணிகளாகச் செயல்படுகின்றன.
நீண்ட நாள்களாகத் தொடரும் காய்ச்சல், மூட்டுவலி, உடல் மற்றும் கன்னங்களில் தோன்றும் சிவப்பு நிற தடிப்புகள், அதிக முடி உதிர்தல் போன்ற அடிப்படை அறிகுறிகளைக் கொண்டு நமக்கு `லூபஸ்' இருப்பதற்கான வாய்ப்புகளை நாம் கணிக்கமுடியும்.
இதன் தீவிரத்தன்மை அதிகரித்தால், கல்லீரல், நரம்பு மண்டலம், இதயம் என உடலின் முக்கிய உறுப்புகளை பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
என்னென்ன சிகிச்சைகள்
`லூபஸ்' நோயினை, வெறும் அறிகுறிகளை மட்டுமே வைத்து நாம் முற்றிலுமாக உறுதி செய்துவிட முடியாது. காரணம், இந்த அறிகுறிகளுக்கு வேறு சில விஷயங்களும், தொற்றுநோய்களும் கூட காரணமாக இருக்கக்கூடும். எனவே, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, ஈஎஸ்ஆர், சிஆர்பி போன்ற பலதரப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இதனை உறுதி செய்ய முடியும்.
பின்பு, உடலின் எதிர்ப்பு சக்தியை மாற்றியமைத்தல், எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், மருந்து, மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் என நோயின் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு நிலையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
தாமதமில்லாத பரிசோதனையும் சரியான சிகிச்சையும் உதவும்!
`லூபஸ்' என்பது முற்றிலுமாக குணப்படுத்தகூடிய நோய் கிடையாது. இது தைராய்டு, நீரிழிவு போன்று வாழ்நாள் நெடுகிலும் நாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
எனவே, ஒருவர் லூபஸ் நோயினால் பாதிக்கப்பட்டு திரும்பினாலும், மீண்டும் அது பாதிக்காமல் இருக்க, சூரிய ஒளி அதிகம் படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல், யோகா மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருத்தல், போதிய கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
Comments
Post a Comment