பல் வலியால் துடிதுடித்து, பல மருத்துவர்களைச் சந்தித்தும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு பல் மருத்துவரைப் பார்த்து, அவர் செய்த மருத்துவத்தால் வலி குறைந்த பின், அவரை ஆபத்பாந்தவனாக நினைத்து பூரித்துப் போகிறவர்கள் பலர். காரணம் அவ்வளவு கடுமையானது பற்களில் ஏற்படும் வலி!
இன்றைய இளம் தலைமுறையினரிடம், `உடலில் ஏற்படும் வலிகளில் கடுமையான வலி எது?’ என்ற கேள்வியை முன்வைத்தால், பலரது பதில் பல் வலியாகத் தான் இருக்கும். காரணம் பல் வலியோ வேறு எந்த விதமான வேலையையும் செய்ய முடியாத தவிப்பைக் கொடுத்து பாடாய்ப்படுத்திவிடும்.

பற்களை நாம் உண்மையாக காதலிக்கிறோமா? ஆழ்ந்து யோசித்தால், இல்லை என்பதே பதில். சமீபத்தில் அனைவருக்கும் பரிச்சயமான திரைப்படம் ‘லவ் டுடே’. அத்திரைப்படத்தில் செல்போன்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதைப் போல, உங்கள் பற்களை நிலைக்கண்ணாடியிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் பற்கள் செய்த தவறுகளையும் குற்றங்களையும் தவறாமல் சுட்டிக்காட்டிவிடும் கண்ணாடி!
பற்களைத் தவறு செய்யத் தூண்டிய நீங்கள் தான் முதல் குற்றவாளி! அதாவது நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் பற்கள் சார்ந்து பல்வேறு குற்றங்களைச் செய்து வருகிறோம். பற்களுக்கென நேரம் ஒதுக்கி, பற்கள் மீது உண்மையான காதல் செலுத்தவில்லை எனில், இனி வரும் காலங்களில் பற்களுக்கு உத்தரவாதம் கிடையாது. தினமும் கண்ணாடியில் பார்த்து பற்களின் நிலையை அறிந்து செயல்படுபவர்கள் வெகு சொற்பம். பல் துலக்கும் போது பற்பசையில் இருந்து நுரை பொங்க கண்ணாடியைப் பார்க்கிறோமே தவிர, தனியாக யாரும் பற்களுக்காக மெனக்கெடுவதில்லை.
முற்காலங்களில் சொன்னதைப் போல, `பல் போனால் சொல் போச்சு' என்பதெல்லாம் அரதப் பழசான மருத்துவ மொழி. செயற்கை பற்களைப் பொருத்திக்கொண்டு பற்களையும் சொற்களையும் மீட்டுவிடுவேன்…’ எனப் பலர் புது வசனம் பேசலாம். ஆனால் இயற்கையான பற்களுக்கு எவ்விதத்திலும் செயற்கை பற்கள் மாற்று கிடையாது.
உணவின் சுவையை முழுவதுமாக உணர்வதில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கும். செயற்கை பற்களால் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. வேறு வழியில்லை என்றால் பொருத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால் நமது உதாசீனத்தால் இயற்கை பற்களின் ஆரோக்கியத்தை இழப்பது பெருந்தவறு! தினமும் காலையிலும் இரவிலும் கண்ணாடியில் தவறாமல் பற்களை சுய பரிசோதனை செய்தாலே பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

பற்பசைகளும்… நெகிழி பற்குச்சிகளும்
பல வண்ணப் பற்பசைகளை எவ்விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு நம்மிடம் இல்லை. ‘வாய் நாற்றத்தைப் பன்னிரண்டு மணி நேரம் வரை… இருபத்து நான்கு மணி நேரம் வரைத் தடுத்து, வாசனையை வீசச் செய்யும் எங்கள் பற்பசைகள்…’ எனும் மாய விளம்பரங்களை நம்பி நம் பற்களை அவர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டோம். முற்றிலுமாக பற்பசை மற்றும் நெகிழி பற்குச்சிகளைப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாறிவிட்டோம். பற்பசைகளைச் சுமந்துகொண்டு வரும் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை நேரம் கொடுத்து படித்துப் பார்த்திருக்கிறோமா?
`இயற்கையின் ஆதரவுடன் கூடிய பற்பசைகள்…’ என விளம்பரம் தற்போது அசுர வேகத்தில் அதிகரித்திருக்கின்றன! `வேம்பு, கருவேலம் எனப் பல மூலிகைகள் மூலம் எங்கள் பற்பசைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன…’ என மீண்டும் இயற்கையை நாடத் தொடங்கி இருக்கின்றன பற்பசை நிறுவனங்கள். ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி!
மூலிகை பற்குச்சிக்கு மீண்டும் மாறுவோம்
முற்றிலும் பற்பசை- பற்குச்சி கலாசாரத்திற்கு அடிமையாகிவிட்டோம். உண்மைதான்! ஆனால் வார இறுதி நாள்களிலாவது பல் துலக்க வேப்பங்குச்சி, ஆலம் விழுது, கருவேலங்குச்சியைப் பயன்படுத்தலாமே! `மீண்டும் ஆர்கானிக்…’ என அனைத்தையும் தேடும் நாம், பற்குச்சிகள் சார்ந்தும் ஆர்கானிக்காக மாற முயலலாமே! நம்முடைய முயற்சி அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியமான பற்களுக்கு வழிவகுக்கும். இயற்கையான பற்குச்சிகளைப் பெற ஆன்லைனில் பல நூறு ரூபாய் கொடுத்தெல்லாம் வாங்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு அருகாமையிலேயே இருக்கின்றன ஆர்கானிக் பற்குச்சிகள்!
குறிப்பாக குழந்தைகளுக்கு இயற்கையான பொருள்களின் உதவியுடன் பல் துலக்கும் கலையை அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால், வாரத்தில் சில நாள்களாவது பின்பற்றுவார்கள். `இந்தக் குச்சி கசப்பு… இந்தக் குச்சி துவர்ப்பு… இந்தந்த சுவைகளின் மருத்துவ குணங்கள் என்ன… பற்களில் இந்த மூலிகை குச்சிகளின் தாக்கம் என்ன… பற்குச்சியின் முனையைக் கடித்து, பிரஷ் போல செய்துகொள்வது எப்படி…’ போன்ற விஷயங்களையும் அவர்களுக்குப் பொறுமையாக விளக்கம் கொடுத்தால் இயற்கையின் ஆதரவைக் குழந்தைகள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீர்குலைந்த பற்களுடன் சிறார்!
கிராமங்களில் ஆங்காங்கே இருந்த மூலிகை குச்சிகளின் மூலம் பல் துலக்கும் வழக்கமும் போகப்போகக் குறைந்துகொண்டே வருகிறது. மூலிகைப் பற்பொடிகளைக் கொண்டு பல் துலக்குபவர்களை இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம். பற்குச்சிகளைச் சேகரித்து விற்பனைக்குக் கொண்டு வந்த தாத்தா பாட்டிகளையும் இப்போது அதிகம் காண முடிவதில்லை. மீண்டும் இந்த ஆரோக்கிய வியாபாரம் அதிகரித்தால் பற்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எப்படி இயற்கைக்கு எவ்வித மாற்றும் கிடையாதோ, அதைப் போல இயற்கையாக அமைந்த பற்களின் வலிமைக்கு ஈடாகாது.
இருமுறை தவறாமல் பல் துலக்கல், பல முறை வாய்க்கொப்பளித்தல், பற்களில் அதிகளவில் ஒட்டக்கூடிய தின்பண்டங்களைத் தவிர்த்தல் அல்லது குறைத்துக்கொள்ளுதல் என பற்கள் சார்ந்து சிறார்களுக்குப் பயிற்றுவித்தல் அவசியம். அதிவேக உலகில் அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே. பெரும்பாலானோர் இவ்வழக்கத்தை முறையாகப் பின்பற்றுவதுமில்லை, அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பதுமில்லை. விளைவு... சீர்குலைந்த பற்களுடன் சிறார் படை! பள்ளியில் இருக்கும் சிறார்களின் பற்களைப் பரிசோதனை செய்தால், ஏறக்குறைய 50 சதவிகித மாணவர்களுக்கு பற்களில் ஏதேனும் பிரச்னை இருப்பதை நேரடியாக உணரலாம்.
வாய் நாற்றமும் பற்களின் மீது அக்கறையும்
`நீங்கள் பேசும் போது வாய் நாற்றம் வருகிறது…’ என்று எதிரில் இருப்பவர் சொல்லிய பிறகு தான் பொறி தட்டுகிறது. உடனடியாக ‘நாற்றம் போக்கும் பற்பசைகள் எவை…’ என கூகுளில் தட்டச்சு செய்கின்றன விரல்கள். நாற்றத்தைப் போக்க பற்பசைகளால் மட்டும் தான் முடியுமா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா! பற்பசைகளால் பல்துலக்கிவிட்டு, அவசர கோலத்தில் முழுமையாக வாய்க் கொப்பளிக்காமல் விடுவதால் பற்பசைகளால் கூட வாயில் நாற்றமடிக்கலாம். பற்களில் ஒட்டிய பற்பசைகளை முறையாக சுத்தம் செய்யவில்லை எனில், அதன் காரணமாக கூட பல் சொத்தை ஏற்படலாம்.

வாய் நாற்றம் ஏற்படும் போது அடிப்படை காரணத்தை மருத்துவரின் மூலம் அறிந்து அதை நிவர்த்தி செய்வதே நேர்வழி! வாய்ப் பகுதியில் உண்டாகும் பாதிப்புகளால் மட்டும் வாய் நாற்றம் ஏற்படுவதில்லை. செரிமான உறுப்புகள் சார்ந்த பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். பணிச் சூழல் காரணமாக, இரவு தூங்கும் அளவுக்கு பகல் நேரத்தில் உறங்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வகையறாவைச் சேர்ந்தவர்கள் விழித்ததும் கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
லேசான வலி ஏற்பட்டால் கூட பற்களைக் கவனிப்பதில்லை. பிரச்னை தீவிரமடைந்து பொறுக்க முடியாத வலி ஏற்பட்ட பிறகு தான் பல் மருத்துவரைத் தேடிச் செல்கிறோம். இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். பற்களில் லேசான மாறுதல்களை உணர்ந்தாலே, உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைப் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கிவிட்டோம். எது எப்படியோ பற்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் இனி கட்டாயம் தேவை!

சித்த மருத்துவத்தில் தீர்வு!
குடும்ப நவீன மருத்துவரைப் போல, குடும்ப சித்த மருத்துவரைப் போல குடும்ப பல் மருத்துவரும் இனி காலத்தின் கட்டாயம்.
சித்த மருந்துகளான திரிபலா சூரணம், கடுக்காய் பொடி, மருதம் பொடி, தந்த தாவனப் பொடி போன்றவை பற்களைத் தூய்மைப்படுத்தும். நாயுருவி வேர், ஆலம் விழுது, புங்கன் வேர், விளா, நாவல்… பற்குச்சிகளாகப் பயன்படும் பொக்கிஷங்கள். பல்வேறு கலவைகளில் பற்பொடிகளும் சித்த மருத்துவத்தில் உண்டு! நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு வாய்க்கொப்பளிக்கும் பழக்கமும் பலன் தரும்.
உறவுகளோடு அதிகம் நேரம் செலவிடாத சூழலில் தான் பலரும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதே நிலைமை தான் பற்களுக்கும்! இனியாவது பற்களைக் காதலிக்கத் தொடங்குவோம். நாம் ஆத்மார்த்த காதலைப் பற்களின் மீது செலுத்தினால், பற்களும் தனது காதலை நூறாண்டுகள் வரை உண்மையாக வெளிப்படுத்தும்! லவ் யுவர் டீத் டுடே!
Comments
Post a Comment