வாழ்வா சாவா என்ற கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் சொதப்பின்னாலும், ஃபீல்ட்டிங்கிலும், கேப்டன்ஸியிலும் தான் ஒரு கில்லாடி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். பதுங்கிப் பதுங்கிப் பாயக் காத்துக் கொண்டிருந்த இந்திய அணி சறுக்கியது எப்படி, ஆஸ்திரேலியா வென்றது எப்படி?
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவும் தான் டாஸ் வென்றிருந்தால் பௌலிங்கைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் டாஸ் முடிவு இந்தியாவின் தோல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டிராவிஸ் ஹெட்டும் மிட்செல் மார்ஷூம் களமிறங்கினர். இருவருமே பவுண்ட்ரியும் சிக்ஸருமாக ஆடத் தொடங்கினர். பவர்பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 27 பந்துகளுக்கு 27 ரன்களும், மார்ஷ் 33 பந்துகளுக்கு 33 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த பாட்னர்ஷிப்பை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா மூளையைப் பிசைந்து கொண்டிருந்தார்.
அப்போதுதான், 'வந்துட்டான்... வந்துட்டான்...' என்ற bgm உடன் மாஸ் என்ட்ரி கொடுத்து பந்தைக் கையில் எடுத்தார் ஹர்திக் பாண்டியா. 10.2 ஓவரில் ஹர்திக் வீசிய ஸ்லோயர் பந்தை டிராவிஸ் ஹெட் லெக் சைடில் தூக்கி அடிக்க 'விக்கெட்... விக்கெட்' என்று மைதானத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் கத்த, அந்த நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்தார் சுப்மன் கில். கைக்கு வந்த லட்டு கேட்சை விட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
மீண்டும் ஒரு விக்கெட் வாய்ப்பு வருமா என்று பார்த்த போது, மீண்டும் ஒரு லட்டு பந்தை ஹர்திக் வீச, ஹெட் அதை ஆஃப் சைடில் தூக்கி அடிக்க, இந்த முறை குல்தீப் யாதவ் அழகாக கேட்ச் பிடித்தார்.
'விக்கெட்டே! நீ எப்ப வர போற? நீ எப்ப வர போற?' எனக் காத்துக் கொண்டிருந்த சேப்பாக்கம் ரசிகர்களுக்கு இந்த விக்கெட் விழுந்ததில் அளவில்லாத ஆனந்தம். ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு விக்கெட் எடுப்பேன் என பந்தைக் கையிலெடுத்தார். அவர் வீசிய பந்து, ஸ்மித் பேட்டில் எட்ஜ் வாங்கி நேராக கே.எல்.ராகுல் கைக்குச் சென்றது. ஸ்மித் வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி கிளம்பிவிட்டார். அரங்கம் மீண்டும் ஆர்ப்பரித்தது.

மார்ஷ் இன்னும் கிரீஸில் இருக்கிறாரே, அவர் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமே என்று நினைத்து மீண்டும் ஹர்திக்கையே கொண்டு வந்தார் ரோஹித் சர்மா. மார்ஷ் ஸ்ட்ரைக்கில் நின்று கொண்டிருக்க, ஹர்திக் பந்து வீச, அந்தப் பந்து இன்சைட் எட்ஜ்ஜாகி மிடில் ஸ்டம்ப்பில் பட்டு எகிறியது. மார்ஷ் என்ற புயலைக் கரை சேர்த்துவிட்டார் பலே பாண்டியா. பவர்பிளேயில் விட்டதை அடுத்த 10 ஓவர்களில் இறுக்கிப் பிடித்தனர் இந்திய அணியினர். எல்லா மேட்ச்களிலும் ஓப்பனராகக் களம் இறங்கும் டேவிட் வார்னர் இந்த முறை மிடில் ஆர்டரில் 4வது பேட்ஸ்மேனாக வந்தார். செட்டில் ஆகமுடியாமல் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஹர்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் பௌலர்கள் மெத்தனப் போக்காகச் செயல்பட்டது போலவே, கடைசி 10 ஓவர்களிலும் செயல்பட்டனர். இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இன்னும் எகிற காரணமாக அமைந்தது.
ஹர்திக்கும், குல்தீப்பும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அக்ஸர் பட்டேலும், சிராஜூம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 270 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் வழக்கம் போல ஓப்பனர்களாக ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் பொறுமையாக ஆடினாலும், போகப் போக அடித்து ஆடி வந்தனர். இந்த இணை 7.4 ஓவரில் 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை நிறைவு செய்தது. 9.1 ஓவரில் அபாட் வீசிய பந்தை ரோஹித் லெக் சைடில் தூக்கி அடித்து, ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் சுப்மன் கில்லும் lbw ஆகி விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு இறங்கிய கோலியும், ராகுலும் விக்கெட் இழக்கக் கூடாது எனப் பொறுமையாக ஆடிவந்தனர். இவர்கள் இருவரும் எப்போது கியரை மாற்றுவார்கள் என ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தனர். லெக் ஸ்பின்னிற்குச் சாதகமாக பிட்ச் இருப்பதால் ஸ்மித், ஆடம் ஜாம்பாவைக் கொண்டு வந்து கே.எல்.ராகுல் விக்கெட்டை எடுத்தார். அதன் பின்பு களமிறங்கிய அக்ஸர் பட்டேல் வந்த உடனே ரன் அவுட்டாகி 2 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதைத் தொடர்ந்து பௌலிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா, 'இது என்னுடைய நாள்' என்றபடியே களத்திற்கு வந்தார். ஹர்திக் பாண்டியா - விராட் கோலி இணை சிறிது நேரம் பொறுமையாக ஆடி வந்தது. ஆஸ்டன் அகர் வீசிய பந்தில் விராட் கோலி டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நன்றாக செட்டில் ஆன பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி தன்னுடைய பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆன பின்பு அடிக்கலாம் என்ற பழைய ஓடிஐ பார்முலாவைப் பின்பற்ற நினைத்து அடுத்தடுத்து அவுட்டாகி நிலை தடுமாறிப் போனனர். இதனால் வின்னிங் 'vibe' ஆஸ்திரேலியா அணியிடம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு ஓடிஐ போட்டிகள் போலவே, இந்த மேட்ச்சிலும் கோல்டன் டக் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 'கோல்டன் டக்' ஆன முதல் இந்தியர் என்ற மோசமான சாதனையைப் பதிவு செய்திருக்கிறார். ஹர்திக்கும் ஜடேஜாவும் மினி பாட்னர்ஷிப்புடன் ஆடி வந்தனர். இந்த இணையாவது இந்திய அணியை வெற்றி வாய்ப்பை நோக்கி நகர்த்திச் செல்லுமா என்று எதிர்பார்த்தபோது, பௌலிங் போட ஆடம் ஜாம்பா வந்தார். ஜாம்பாவின் ஸ்பின்னில் இந்த இரண்டு பெரிய தலைகளும் காலி.
இந்திய பேட்ஸ்மேன்கள் செட்டிலான பின்பு, சரவெடியாய் வெடிப்பார்கள் எனக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அப்படியொரு சம்பவத்தைப் பார்க்காமலே சோகத்துடன் வெளியேறத் தொடங்கினர். ஓரிரு நிமிட ஆனந்தத்திற்காக முகமது ஷமி ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரைப் பறக்க விட்டார். இறுதியாக, 49.1 ஓவரில் 248 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் உருவான குழப்பமும் இந்திய அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோஹித் விளக்கம் அளித்துள்ளார். "பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். லெக் ஸ்பின்னிற்கு எதிராக நன்கு ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும்!" எனப் பேசியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இன்று பேட்டிங்கில் சொதப்பினாலும், ஃபீல்ட்டிங்கிலும் கேப்டன்ஸியிலும் தான் ஒரு 'GOAT' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் முதல் இடம் வகிக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மஞ்ச பனியன் போட்டவங்களுக்குதான் சென்னை பிட்ச் சாதகம் என்று மேட்ச் தொடக்கத்தில் அந்த `CSK fan' சொன்னது உண்மைதான் போலயே!
Comments
Post a Comment