Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா... குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாமா.... நல்லெண்ணெயை அப்படியே தலையில் தேய்த்துக் குளிப்பது சரியா அல்லது சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் (நெய் குளியல்) எடுக்கும்போது, அதனை கண்டிப்பாகச் சூடுபடுத்தித்தான் பயன்படுத்த வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும்கூட, எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி ஆறவைத்துப் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயை லேசாகச் சூடாக்கிப் பயன்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் அது தரும் குளிர்ச்சியை ஈடுகட்ட நிச்சயம் அப்படிச் செய்தாக வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறையான எண்ணெய்க் குளியலுக்கான அடிப்படை...